
31 பேர் பலியான இஸ்லாமாபாத் பள்ளிவாசல் தற்கொலை வெடிகுண்டுத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றது IS தீவிரவாத கும்பல்
இஸ்லாமாபாத், பிப்ரவரி-7,
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஷியா பள்ளிவாசலில் நேற்று நடந்த தற்கொலை வெடிகுண்டுத் தாக்குதலுக்கு, IS இஸ்லாமிய தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.
தனது தீவிரவாதிகளில் ஒருவர் தொழுகையாளர்களைக் குறிவைத்து, ஒரு வெடிகுண்டு அங்கியை வெடிக்கச் செய்து, இறப்புகளையும் காயங்களையும் ஏற்படுத்தியதாக IS கூறிக் கொண்டது.
எனினும் இதுவொரு பழிவாங்கலா அல்லது பாகிஸ்தான் அரசுக்கு விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கையா என்பது குறித்து எதுவும் புலப்படவில்லை.
வெள்ளிக்கிழமை தொழுகையின் போது நிகழ்ந்த அவ்வெடிப்பில் குறைந்தது 31 பேர் கொல்லப்பட்டனர்; மேலும் 169 பேர் காயமடைந்துள்ளனர்.
நமாஸ் தொழுகையின் போது முதலில் துப்பாக்கிச் சூட்டு போன்ற சத்தம் கேட்டதாகவும், அடுத்த நொடியே அனைத்தும் வெடித்துச் சிதறியதாகவும் உயிர் பிழைத்த சிலர் கூறினர்.
2008-ஆம் ஆண்டு Marriot ஹோட்டலில் நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலுக்குப் பிறகு, இஸ்லாமாபாத்தில் நிகழ்ந்துள்ள மிகப்பெரிய தாக்குதலாக இது கருதப்படுகிறது.
பாதுகாப்புப் படைகள் சம்பவ இடத்தை முற்றுகையிட்டு, தீவிர விசாணையில் இறங்கியுள்ளனர்.
தாக்குதலுக்குக் காரணமானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவர் என பாகிஸ்தான் பிரதமர் Shehbaz Shariff சூளுரைத்துள்ளார்.



