
பாரிட், செப்டம்பர்-22,
இம்மாதத் தொடக்கத்தில் பேராக் தெங்காவில் உள்ள மளிகைக் கடையொன்றில் இளம் பெண்ணின் கன்னத்தைத் தொட்டு கிள்ளியக் குற்றத்திற்காக, 63 வயது ஆடவருக்கு 2,500 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதையடுத்து, Samsuri Kamaruddin-னுக்கு பாரிட் மேஜிஸ்திரேட் நீதிமன்றம் அத்தண்டனையை விதித்தது.
Simpang 4 Bota Kanan பகுதியில் உள்ள மளிகைக் கடையில் செப்டம்பர் 5-ஆம் தேதி மாலை 4 மணிக்கு தம்மை மானபங்கம் படுத்தும் வகையில் முதலாளி நடந்துகொண்டதாக, 23 வயது இளம்பெண் முன்னதாக போலீஸில் புகார் செய்திருந்தார்.
கல்லாப்பெட்டியில் பணத்தை எண்ணிக் கொண்டிருந்த போது ஏற்பட்ட அச்சம்பவத்தால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி, வேலைக்குச் செல்லவே பெரும் அச்சத்திலிருப்பதாக அப்பெண் போலீஸ் புகாரில் கூறினார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் வரை சிறை, அபராதம் அல்லது பிரம்படி தண்டனை வழங்க சட்டத்தில் இடமுண்டு.
எனினும், வழக்கை விசாரித்த நீதிபதி அபராதத்தோடு நிறுத்தினார்; அபராதம் செலுத்தத் தவறினால் 6 மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் எச்சரித்தார்.
அதோடு, என்னதான் அறிமுகமானவர்களாக இருந்தாலும், ஆண் பெண் வரம்பு மீறி நடந்துகொள்ளக் கூடாது என அம்முதியவரைக் கண்டித்தார்.
Samsuri பின்னர் அபராதத்தைச் செலுத்தி சிறைத் தண்டனையிலிருந்து தப்பினார்.



