
கோலாலம்பூர், நவம்பர்-9,
KUSKOP எனப்படும் தொழில்முனைவோர் – கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் டத்தோ இவோன் பெனடிக் (Ewon Benedick) பதவி விலகியுள்ளார்.
அது தொடர்பாக பல மாதங்களாகவே யூகங்கள் நிலவி வந்த நிலையில், நேற்றிரவு ஃபேஸ்புக் பதிவு வாயிலாக அவர் அத்தகவலை உறுதிப்படுத்தினார்.
சபாவிலிருந்து கூட்டரசுக்குக் கிடைக்கும் வருவாயில் அம்மாநிலத்துக்கான 40% வருமான உரிமையை உறுதிப்படுத்திய கோத்தா கினாபாலு நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, தேசிய சட்டத்துறை அலுவலகம் மேல் முறையீடு செய்யும் வாய்ப்பு இருப்பதால், ஏற்கனவே கூறியபடி அவர் ராஜினாமா முடிவை எடுத்துள்ளார்.
MA63 மலேசிய ஒப்பந்தப்படி சபாவின் உரிமையை மதிக்கும் வகையில் அரசாங்கம் மேல்முறையீடு செய்யக் கூடாது என்ற நிலைபாட்டை இவோன் மறுஉறுதிப்படுத்தினார்.
UPKO கட்சியின் தலைவருமான இவோன், தனது ராஜினாமா கடிதம் முறைப்படி பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் ஒப்படைக்கப்படுமென்றும் சொன்னார்.
இதனிடையே, நீதிமன்றத்தின் அத்தீர்ப்பை நடைமுறைப்படுத்தும் முன், அது ஆழமாக ஆராயப்பட வேண்டும்.
எதிர்காலத்தில்
சட்ட மற்றும் அரசியல் சிக்கல்கள் ஏற்படுவதைத் தவிர்க்க அது அவசியம் என, தொடர்புத் துறை அமைச்சர் டத்தோ ஃபாஹ்மி ஃபாட்சில் கூறியுள்ளார்.
“சட்டத் துறை அலுவலகம் அந்த 109 பக்கத் தீர்ப்பை தற்போது ஆய்வு செய்து வருகிறது. பிரதமர் அன்வாரும் கோத்தா கினாபாலுவுக்கு வருகை தரும் போது இது பற்றி பேசுவார்” என, ஒற்றுமை அரசாங்க பேச்சாளருமான ஃபாஹ்மி கூறினார்.
கோத்தா கினாபாலு உயர் நீதிமன்றம் அக்டோபர் 17-ஆம் தேதி அளித்த முக்கியத் தீர்ப்பில், 1974 முதல் 2021 வரையிலான ஒவ்வொரு நிதியாண்டுக்கும் மாநிலத்தின் 40% வருமான உரிமையை தீர்மானிக்க சபாவுடன் மறுஆய்வு நடத்துமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
அந்த மறுஆய்வு 90 நாட்களுக்குள் தொடங்கி 180 நாட்களுக்குள் முடிக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அத்தீர்ப்புக்கு எதிராக புத்ராஜெயா மேல்முறையீடு செய்யக் கூடாது என சபா கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.



