
துபாய், செப்டம்பர்-29,
துபாயில் நடைபெற்ற ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியின் இறுதியாட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா, வெற்றி கோப்பையை வாங்காமல், விசித்திர சூழ்நிலையை ஏற்படுத்தியது.
நேற்றைய போட்டியில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, பாகிஸ்தானை 5 விக்கெட்டுகளில் தோற்கடித்தது.
41 ஆண்டு கால ஆசியக் கிண்ண வரலாற்றில் இந்தியாவும் பாகிஸ்தானும் இறுதியாட்டத்தில் சந்தித்தது இதுவே முதன் முறை.
இந்த வரலாற்றுப் பூர்வ வெற்றிக்குப் பிறகும், கோப்பை வழங்கும் நிகழ்ச்சி தாமதமானது.
கோப்பையை வழங்கப் போவது, பாகிஸ்தான் உள்துறை அமைச்சரும் ஆசிய கிரிக்கெட் மன்றத்தின் தலைவருமான மொஹ்சின் நக்வி (Mohsin Naqvi) என தெரிய வந்ததால், கோப்பையை இந்திய அணி ஏற்க மறுத்தது.
எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியத்தின் துணைத் தலைவர் காளித் அல் சரூனி வழங்கினால் மட்டுமே கோப்பையை ஏற்கத்
தயார் என இந்திய வீரர்கள் திட்டவட்டமாகக் கூறினர்; ஆனால் நக்வி அதனை அனுமதிக்கவில்லை.
இதனால் பரபரப்பு ஏற்பட்டு, இரசிகர்களும் “பாரத் மாதா கி ஜே”என முழங்கி அரங்கை அதிர வைத்தனர்.
நிகழ்ச்சி குழப்பத்தில் சிக்கியதால், வெற்றி கோப்பை உடனடியாக உட்புற அறைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
இதன் மூலம், வரலாற்றில் முதன்முறையாக, ஆசிய வெற்றிக் கோப்பையை இந்தியா விழா மேடையில் ஏற்காத அசாதாரண நிகழ்வாக அது அமைந்துள்ளது.
ஜம்மு – காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா – பாகிஸ்தான் மோதல் முற்றி, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் கடும் விரிசல் விழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.