கோலாலம்பூர், பிப்ரவரி-6 – இலக்கவியல் பொருளாதாரத்தில் மலேசியாவின் போட்டியாற்றலை வலுப்படுத்தவும், நிலையான செயற்கை நுண்ணறிவு (AI) உட்பட இலக்கவியல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை உறுதிப்படுத்தவும் இலக்கவியல் அமைச்சு பல்வேறு முயற்சிகளை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது.
அதே வேளை, பொதுச் சேவை துறையில் AI அதிகமாகப் பயன்படுத்துவதையும் தமதமைச்சு உறுதிபடுத்தும் என அமைச்சர் கோபிந்த் சிங் டியோ கூறியுள்ளார்.
அவ்வகையில், 445,000 பொதுச் சேவை ஊழியர்கள் பயன்பெறும் வகையில்,
இலக்கவியல் அமைச்சும், தேசிய AI அலுவலகமும் கூகள் Cloud-ம் கைக்கோர்த்துள்ளன.
‘பணியிடத்தில் AI 2.0’ திட்டத்தை நேற்று அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்த போது, கோபிந்த் சிங் அதனை அறிவித்தார்.
மலேசிய கூகள் நிறுவனத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கூகள் நிறுவன ஆசிய பசிபிக் நிர்வாக இயக்குனர், இலக்கவியல் அமைச்சின் தலைமைச் செயலாளர் பாபியன் பிகர், அமைச்சின் முக்கிய அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.
இந்த முன்னெடுப்பின் வழி,
மக்களுக்குச் சிறந்த சேவையை வழங்க பொதுச் சேவை ஊழியர்களுக்குத் தேவையான AI சாதனங்கள் வழங்கப்படும்.
இதன்வழி, கொள்கை ஆவணங்கள், தரவை பகுப்பாய்வு செய்தல், பணிச்சுமைகளை ஒழுங்குபடுத்துதல் மற்றும் நாட்டு மக்களின் ஈடுபாட்டை அதிகரிக்கச் செய்வதோடு, நேரத்தை மிச்சப்படுத்தவும் பணியின் தரத்தை மேம்படுத்தவும் முடியும்.
மலேசிய பொதுச் சேவை துறையை புதுமை, செயல்திறன் மற்றும் முன்மாதிரியாக மாற்றும் மடானி அரசாங்கத்தின் முயற்சிகளில் இது ஒரு மாபெரும் முன்னெடுப்பு என கோபிந்த் சொன்னார்.
பொதுச்சேவைத் துறை ஊழியர்கள் இலக்கவியல் துறையில் தங்களது திறனை மேம்படுத்துவது, மக்களுக்கு மிகுந்த நன்மைப் பயக்கும்.
எனவே அனைத்து அரசு நிறுவனங்களும் AI அதிநவீன தொழில்நுட்பத்தை அன்றாட பணிகளில் பயன்படுத்திகொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
இவ்வேளையில், தேசிய இலக்கவியல் இலாகா, பொதுச் சேவை துறைக்கான AI வழிகாட்டியை உருவாக்கி வருக்கிறது.
இந்த வழிகாட்டி விரைவில் பயன்பாட்டுக்கு வருமென்றார் அவர்.