
தீபாவளி நெருங்கும்போது, பண்டிகைக்கான ஏற்பாடுகளுடன் செலவுகளும் சேர்ந்தே வருகின்றன. வசதி குறைந்த குடும்பங்களுக்கு அந்தச் சுமையை ஓரளவு குறைக்கும் வகையில், பினாங்கில் இவ்வாண்டும் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்படுகின்றன.


Kepala Batas, Perai, Bukit Mertajam, Nibong Tebal உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த குடும்பங்களுக்கு இந்த உதவிகள் வழங்கப்படுவதாக மேலவை உறுப்பினர் செனட்டர் டாக்டர் ஆர்.ஏ. லிங்கேஸ்வரன் தெரிவித்தார். இந்தியர்கள் மட்டுமின்றி, மலாய்க்காரர்கள், சீனர்கள் என உதவி தேவைப்படும் பிற இனக் குடும்பங்களும் இதில் பயன்பெறுகின்றனர்.



இந்த முயற்சிக்குப் பின்னால் ஒரு குடும்பத்தின் 45 ஆண்டுகாலப் பின்னணி உள்ளது. பண்டிகையின் மகிழ்ச்சியை வசதி குறைந்தவர்களுடனும் பகிர்ந்துகொள்ள வேண்டும் எனத் தனது மறைந்த பாட்டி கூறிய அறிவுரையை லிங்கேஸ்வரன் நினைவுகூர்ந்தார். அந்த எண்ணத்தின் அடிப்படையில், அவரது தந்தை டத்தோ ஸ்ரீ ஆர். அருணாசலமும் குழுவினரும் தொடங்கிய உணவுப் பொட்டலங்கள் வழங்கும் பணி, ஆண்டுதோறும் தொடர்ந்து வருகிறது.

இன்று 75 வயதாகும் அருணாசலம், இப்போதும் இந்தப் பணியை முன்னெடுத்து வருகிறார். நண்பர்கள், தன்னார்வலர்கள் மற்றும் நலன்விரும்பிகளின் பங்களிப்பும் இந்த முயற்சி தொடரத் துணையாக இருப்பதாக லிங்கேஸ்வரன் கூறினார்.
உதவி தேவைப்படும் ஒரு குடும்பத்துக்கு ஆதரவளிக்கும்போது, இனம் அல்லது மதம் தடையாக இருக்கக்கூடாது எனக் குறிப்பிட்ட அவர், இந்தப் பகிர்வு மனப்பான்மை அடுத்த தலைமுறையிடமும் தொடர வேண்டும் என்ற விருப்பத்தைத் தெரிவித்தார்.
தீபாவளியின் மகிழ்ச்சி பலகாரங்களில் மட்டுமின்றி, ஒருவருக்கொருவர் காட்டும் அன்பிலும் அக்கறையிலும் இருப்பதாகக் கூறிய லிங்கேஸ்வரன், அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்தார்.



