Op Kutip சோதனை: சௌக்கிட்டில் 79 கள்ளக்குடியேறிகள் கைது

கோலாலாம்பூர், ஜனவரி-14-இன்று அதிகாலை தலைநகர் சௌக்கிட்டில் உள்ள பழைய அடுக்குமாடி குடியிருப்பில் குடிநுழைவுத் துறை மேற்கொண்ட Op Kutip சோதனையில், 79 கள்ளக் குடியேறிகள் கைதுச் செய்யப்பட்டனர்.
அவர்கள் முறையே 39 இந்தோனேசியர்கள், 25 வங்காளதேசிகள், 10 நேப்பாளிகள், 2 இந்தியப் பிரஜைகள், 2 பாகிஸ்தானியர்கள், ஒரு மியன்மார் நாட்டவர் ஆவர்.
23 பேர் பெண்களாவர் என குடிநுழைவுத் துறையின் நடவடிக்கைப் பிரிவுக்கான துணைத் தலைமை இயக்குநர் டத்தோ Lokman Effendi Ramli கூறினார்.
அப்பகுதி கள்ளக் குடியேறிகளின் கூடாரமாக விளங்குவதாக தகவல் கிடைத்தை அடுத்து, பின்னிரவு 12.30 மணிக்கு சோதனைத் தொடங்கியது.
கைதானவர்கள் 7 முதல் 55 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்; முறையான பெர்மிட் இல்லாதது, அனுமதிக்கப்பட்டதை விட கூடுதல் காலம் இந்நாட்டில் தங்கியிருந்தது உள்ளிட்ட விதிமீறல்களுக்காக அவர்கள் கைதாகினர்.
அவர்களில் பெரும்பாலோர் பாதுகாவலர்களாகவும், கட்டுமானத் தொழிலாளர்களாகவும் சட்டவிரோதமாக வேலை செய்வதோடு, சுகாதாரக் கேடுகளை விளைவிக்கக் கூடிய அளவுக்கு மிகவும் நெருக்கமானச் சூழலில் தங்கியிருந்தது தெரிய வந்தது.
அதிகாரிகளைக் கண்டதும், பலர் சிங்கி, பழைய சாமான்கள் மற்றும் தண்ணீர் டாங்கிகளின் அடியில் ஒளிந்துகொண்டதையும் சோதனையின் போது காண முடிந்தது.
இதனிடையே, பழைய கிள்ளான் சாலையிலும் சோதனைத் தொடரப்பட்டதில், அங்கு 66 இந்தோனேசியர்கள் உட்பட 71 கள்ளக் குடியேறிகள் கைதாகினர்.
NPE நெடுஞ்சாலை ஓரமாக, படுக்கையறை, குளியலறை, சமையலறை, வரவேற்பறை, பள்ளிவாசல் போன்ற வசதிகளுடன் சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட குடியிருப்புகளில் அவர்கள் தங்கியிருந்தனர்.
மின்சார, தண்ணீர் இணைப்புகளும் சட்டவிரோதமாக மேற்கொள்ளப்பட்டிருந்தது அம்பலமானது.
விசாரணைகளுக்காக அனைவரும் குடிநுழைவுத் தடுப்பு முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர்.



