47-வது அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றார்; பொற்காலம் திரும்புமென சூளுரை

வாஷிங்டன், ஜனவரி-21, தேர்தலில் வெற்றிப் பெற்ற இரண்டரை மாதங்களுக்கு பிறகு, அமெரிக்காவின் 47-வது அதிபராக டோனல்ட் டிரம்ப் பதவியேற்றுள்ளார்.
தலைநகர் வாஷிங்டனில் உள்ள Capital எனப்படும் நாடாளுமன்றக் கட்டடத்தின் உள்ளரங்கில் அவர் பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
முன்னதாக துணை அதிபராக ஜே.டி.வேன்ஸ் (JD Vance) பதவியேற்றார்.
இந்திய வம்சாவளியான அவரின் மனைவி உஷா பைபிளைக் கையில் பிடித்துக் கொள்ள, அதனைத் தொட்டவாறே வேன்ஸ் பதவி உறுதிமொழி எடுத்துகொண்டார்.
வழக்கமாக பதவியேற்பு அக்கட்டடத்தின் வெளிமுற்றத்தில் தான் நடைபெறும்; ஆனால்
அமெரிக்காவில் கடுங்குளிர் மற்றும் பனிப்பொழிவு நிகழ்வதால், 40 ஆண்டுகளுக்குப் பிறகு அதிபர் பதவியேற்பு உள்ளரங்கில் நடைபெற்றது.
பதவி விலகிச் செல்லும் அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரீஸ், முன்னாள் அதிபர்கள் பராக் ஒபாமா, ஜோர்ஜ் புஷ், பில் கிளிண்டன் உள்ளிட்டவர்களும் அதில் பங்கேற்றனர்.
உலக மகா கோடீஸ்வரர் இலோன் மாஸ்க், facebook நிறுவனர் மார்க் ஜக்கர்பெர்க், கூகுள் நிறுவனத்தின் சுந்தர் பிச்சை உள்ளிட்டோரும் அழைக்கப்பட்டிருந்தனர்.
பதவியேற்புக்குப் பிறகு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய டிரம்ப், தமது ஆட்சியின் கீழ் அமெரிக்காவின் பொற்காலம் திரும்புமென சூளுரைத்தார்.
நவம்பர் 5 அதிபர் தேர்தலில் ஜனநாயக் கட்சியின் கமலா ஹாரீசை தோற்கடித்து, டிரம்ப் இரண்டாவது முறையாக வெள்ளை மாளிகைக்குள் நுழைந்துள்ளார்.