Latestமலேசியா

5 கார்கள் ஒரு மோட்டார் சைக்கிள் சம்பந்தப்பட்ட விபத்தில் 2 சிறுவர்கள் காயம்

கம்பார், ஏப்-1-மாலிம் நவாரில் உள்ள துவாலாங் (Tualang Sekah)தேசியப் பள்ளிக்கு முன்பாக
ஐந்து கார்கள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் சம்பந்தப்பட்டட விபத்தில் , பள்ளியிலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த இரு சிறுவர்கள் காயமடைந்தனர்.

நேற்று மாலை மணி சுமார் 6.42 அளவில் இரண்டு பள்ளிப் பிள்ளைகளுடன் 31 வயதுப் பெண் ஒருவர் ஓட்டிச் சென்ற பெரோடுவா விவா கார், பள்ளிக்கு முன்னால் சாலையின் ஓரத்தில் இருந்து விலகி பெக்கான் மாலிம் நவார் நோக்கிச் சென்றபோது , எதிர் திசையில் இருந்து வந்த புரோட்டான் சத்ரியா கார், கட்டுப்பாட்டை இழந்து எதிர் வழிப் பாதைக்குள் நுழைந்து, அந்த வாகனத்தின் முன்புறத்தில் மோதியதில் அது கவிழ்ந்ததாக நம்பப்படுகிறது என கம்பார் மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் நஸ்ரி டாவுட் தெரிவித்துள்ளார்.

அதே வேளையில் 19 வயது பெண் ஓட்டிச் சென்ற புரோட்டான் சத்ரியா கார் யமஹா Y15ZR மோட்டார் சைக்கிள் மீது மோதியதில், அப்பெண் சாலையின் நடுவில் தூக்கி வீசப்பட்டார்.

இந்த விபத்தைத் தவிர்க்க முடியாமல், சம்பவ இடத்தில் இருந்த பல வாகனங்களும் தொடர் விபத்தில் சிக்கின.

இந்த விபத்தில் பெரோடுவா விவா காரில் பயணித்த ஏழு மற்றும் ஐந்து வயதுடைய இரண்டு சிறுவர்களுக்கு தலையில் சிறு காயங்கள் ஏற்பட்ட நிலையில் ஓட்டுநருக்கு நெஞ்சு மற்றும் முழங்கால்களில் வலி ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநருக்கு இடது விலா எலும்பு மற்றும் வலது இடுப்பு எலும்பு முறிவு உள்ளிட்ட பலத்த காயங்கள் ஏற்பட்டதால் , அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

எதிர் திசைப் பாதைக்குள் நுழைவதற்கு முன்பு வாகனத்தைக் கட்டுப்படுத்தத் தவறிய புரோட்டான் சத்ரியா ஓட்டுநரே விபத்திற்குக் காரணம் என்று நம்பப்படுவதாக தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக முகமட் நஸ்ரி குறிப்பிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!