
கோலாலம்பூர், அக்டோபர்-24, நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் My50 மாதாந்திர பயண அட்டைகளைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை இரு மடங்காக உயர்வு கண்டுள்ளது.
பொது போக்குவரத்து முறைகளை மேம்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சி சரியான பாதையில் போய்க் கொண்டிருப்பதை இது காட்டுவதாக, போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் கூறினார்.
2019-ஆம் ஆண்டு அறிமுகம் கண்ட போது 98,000 பயனர்கள் அந்த மாதாந்திர பயண அட்டையைப் பயன்படுத்தினர்.
தற்போது அவ்வெண்ணிக்கை 220,000 பேராக உயர்ந்துள்ளது.
My50 என்பது, கிள்ளான் பள்ளத்தாக்கில் மாதத்திற்கு வெறும் 50 ரிங்கிட் கட்டணத்தில் LRT, MRT, Monorail, BRT, Rapid KL பேருந்துகள், MRT feeder பேருந்துகள் ஆகியவற்றின் சேவைகளைக் கட்டுப்பாடில்லாமல் பயன்படுத்த வகைச் செய்யும் பயண அட்டையாகும்.
மாதம் 50 வெள்ளி என்றால், வேலைக்குச் சென்று வர மக்கள் ஒரு நாளைக்கு 2 ரிங்கிட்டுக்கும் குறைவாகவே செலவிடுகின்றனர்; வேலைக்கு காரிலோ அல்லது மோட்டார் சைக்கிளிலோ செல்வதை விட, இந்த My50 பயணங்கள் மலிவானதாகும்.
இவ்வேளையில், My50 பயண அட்டையை Touch ‘n Go e-wallet சேவையுடன் ஒருங்கிணைக்குமாறு Prasarana நிறுவனத்தை அந்தோனி லோக் உத்தரவிட்டுள்ளார்.
இதன் மூலம் நடப்பிலுள்ளது போல் LRT நிலையங்களுக்குச் செல்லத் தேவையின்றி, பயனர்கள் டிஜிட்டல் முறையிலேயே My50 பயண அட்டையைப் புதுப்பிக்க வாய்ப்பேற்படுமென்றார் அவர்.