
கோலாலம்பூர், அக்டோபர்-29, 2025 வரவு செலவுத் திட்டத்தில் இந்தியச் சமூகத்துக்கு அறிவிக்கப்பட்ட நிதி ஒதுக்கீடு போதுமானதாக இல்லையென்பதால், பிரதமர் அதனை மறு ஆய்வு செய்ய வேண்டும்.
கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ.கணபதிராவ் அவ்வாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்தியச் சமூக உருமாற்றப் பிரிவான மித்ராவுக்கு 100 மில்லியன் ரிங்கிட்டும், தெக்குன் கடனுதவித் திட்டத்துக்கு 30 மில்லியன் ரிங்கிட்டும் தொடர்ந்து 9-வது ஆண்டாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
இந்தியர்களின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு இது எந்த மூலை என, மக்களவையில் பட்ஜெட் விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய போது கணபதிராவ் கேட்டார்.
மித்ராவுக்கான நிதி குறைந்தது 300 மில்லியன் ரிங்கிட்டாக உயர்த்தப்பட வேண்டும்.
அதே சமயம் தெக்குன் கடனுதவிக்கான நிதி ஒதுக்கீடு 100 மில்லியனாக உயர்த்தப்படுவதே நியாயமாக இருக்குமென்றார் அவர்.
மற்றவர்களுக்கு ஒதுக்கப்பட்டதை நாங்கள் கேள்விக் கேட்கவில்லை.
எங்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டியதைத் தான் கேட்கிறோம்.
அப்படியொன்றும் இந்தியச் சமூகம் பெரிதாக கேட்டுவிடவில்லை; மொத்த பட்ஜெட்டில் ஒரு சிறு துளியைத்தான் எதிர்பார்ப்பதாக கணபதிராவ் சொன்னார்.
நாட்டின் வளப்பம் அனைவருக்கும் சமமாகப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டியது அவசியமாகும்.
மனம் உண்டானால் மார்க்கம் உண்டு என்பதற்கொப்ப நிதியமைச்சருமான டத்தோ ஸ்ரீ அன்வார், இந்தியர்களின் மனவோட்டத்தை புரிந்து நல்லதொரு முடிவை எடுக்க வேண்டுமென கணபதிராவ் கேட்டுக் கொண்டார்.