Latestமலேசியா

7 நாட்களில் 12 மலைச் சிகரங்கள்; தனது சாதனையைத் தானே முறியடித்து மலேசிய இந்தியர்களுக்குப் பெருமை சேர்த்த லோகசந்திரன்!

கோலாலம்பூர், செப்டம்பர் 18 – ஏழு நாட்களில் 12 மலைச் சிகரங்களை வெற்றிகரமாக அடைந்து, தனது முந்தைய சாதனையைத் தானே முறியடித்து மலேசிய இந்திய சமூகத்திற்குப் பெருமை சேர்த்துள்ளார் மலையேறும் வீரர் லோகச்சந்திரன் ராமச்சந்திரன்!

இவரது இந்த அபார முயற்சிக்கு இன்று மலேசிய சாதனைப் புத்தகத்தின் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
‘Most Summits Conquered in a Week’ எனும் பிரிவில் லோகசந்திரனுக்கு இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2025ஆம் ஆண்டு ஏழு நாட்களில் 9 மலைச் சிகரங்களை அடைந்து மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்ற லோகசந்திரன், இவ்வாண்டு அதே ஏழு நாட்களில் 12 சிகரங்களை அடைந்து தனது சொந்தச் சாதனையையே முறியடித்துள்ளார்.

இது மலேசிய சாதனைப் புத்தகத்துடன் லோகசந்திரன் மேற்கொண்ட இரண்டாவது சாதனை முயற்சி எனக் கூறிய மெகாட், அடுத்த ஆண்டு ஏழு நாட்களில் 18 மலைச் சிகரங்களை அடைந்து மூன்றாவது முறையாக தனது சாதனையை முறியடிக்க லோகசந்திரன் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அந்த முயற்சி சாத்தியமானால், லோகசந்திரனின் சாதனைப் பயணத்திற்கு மலேசிய சாதனைப் புத்தகம் தொடர்ந்து ஆதரவு வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, இந்தச் சாதனை தனிப்பட்ட ஒருவரின் வெற்றி மட்டுமல்ல; தன்னுடன் பயணித்த ஒட்டுமொத்த குழுவின் வெற்றி என லோகசந்திரன் தெரிவித்துள்ளார்.

ஜெய்சந்திரன் (Jayachandran), தருண் (Tharun), சாந்தா (Shantha), ஷனாரன் (Shanaran) உள்ளிட்ட குழு உறுப்பினர்களுக்கும், தமக்கு ஆதரவு வழங்கிய நன்கொடையாளர்கள், பொதுமக்கள் மற்றும் காயம் ஏற்பட்ட நேரத்திலும் ஊக்கமளித்து பிரார்த்தனை செய்த அனைவருக்கும் லோகசந்திரன் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

“அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டதால்தான் இந்தச் சாதனையை நிறைவு செய்ய முடிந்தது. தனிப்பட்ட ஒருவராக என்னால் இதனைச் செய்திருக்க முடியாது,” என லோகசந்திரன் கூறினார்.

லோகசந்திரனின் சாதனைப் பயணத்தில் தொடக்கம் முதலே ம் உடன் பயணித்து வருகிறது வணக்கம் மலேசியா.

இவரது முதலாவது சாதனை முயற்சியிலிருந்தே இவரது பயணத்தையும் சவால்களையும் வெற்றிகளையும் தொடர்ந்து மக்களிடம் கொண்டு சேர்த்த வணக்கம் மலேசியாவுக்கு லோகசந்திரன் சிறப்பு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

குறிப்பாக, இம்முறை மலையில் காயமடைந்தபோது சில இடங்களில் மட்டுமே தொலைத்தொடர்பு மற்றும் இணைய வசதி கிடைத்ததாகக் கூறிய அவர், வணக்கம் மலேசியா உடனுக்குடன் வெளியிட்ட செய்திகளின் மூலமே மலையடிவாரத்தில் இருந்த தனது குழுவினருக்கு நிலைமை தெரியவந்ததாகக் குறிப்பிட்டார்.

அதனைத் தொடர்ந்து தனது குழுவினர் உடனடியாக அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

தனது சாதனைப் பயணத்தின் ஒவ்வொரு கட்டத்தையும் தொடர்ந்து பதிவு செய்து மக்களிடம் கொண்டு சேர்த்த வணக்கம் மலேசியாவுக்கும் அதன் அனைத்துப் அதிகாரிகளுக்கும் லோகசந்திரன் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.

இளைஞர்களின் திறமைகளையும் சாதனை முயற்சிகளையும் உலகறியச் செய்வதோடு, குறிப்பாக மலேசிய இந்தியர்கள் புதிய உயரங்களை எட்ட மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு வணக்கம் மலேசியா தொடர்ந்து ஊக்கமும் ஆதரவும் வழங்கி வருகிறது.

9 சிகரங்களிலிருந்து 12 சிகரங்கள் — அடுத்து இவரின் இலக்கு 18!

ஒவ்வொரு முறையும் தனது எல்லையைத் தானே தாண்டிச் செல்லும் லோகசந்திரனின் பயணம், முயற்சியும் மனஉறுதியும் இருந்தால் மலேசிய இந்திய இளைஞர்களாலும் புதிய வரலாற்றைப் படைக்க முடியும் என்பதற்கான ஊக்கமாக அமைந்துள்ளது.

இன்று லோகசந்திரனின் பெயரில் மலேசிய சாதனைப் புத்தகத்தில் மேலும் ஒரு சாதனை பதிவாகியுள்ள நிலையில்; மலேசிய இந்திய சமூகத்தின் சாதனைப் பயணத்திலும் பெருமைக்குரிய மற்றொரு அத்தியாயம் இணைந்திருக்கிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!