
கோலாலம்பூர், ஆகஸ்ட்-16-தாயின் அன்புக்கு ஈடு இணை ஏதுமில்லை என்பதை உணர்த்தும் வகையில், தங்களது தாயாரின் 70-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு மலேசியா மற்றும் சிங்கப்பூரிலுள்ள 70 முருகன் ஆலயங்களுக்கு அழைத்துச் சென்று தரிசனம் செய்து வைத்து, நெகிழ்ச்சியூட்டும் ஆன்மீகப் பரிசை வழங்கியுள்ளனர் அவரது அன்பு மகன்கள்…
பொதுவாகப் பிறந்தநாள் என்றாலே கேக் வெட்டுவதும், வெளியூர்களுக்குச் சுற்றுலா செல்வதும் வழக்கம்.ஆனால், தன் தாயின் 70-ஆவது பிறந்தநாளை என்றென்றும் நினைவில் நிற்கும் வகையில் ஆன்மீகப் பயணமாக மாற்றத் திட்டமிட்டார் கேப்டன் பழனி மாசிலாமணி.
கடந்த ஜூலை 31-ஆம் தேதி தொடங்கிய இந்தப் புனிதப் பயணம், ஜோகூர், சிங்கப்பூர், மலாக்கா, நெகிரி செம்பிலான், கெடா எனப் பல மாநிலங்களைக் கடந்து தொடர்ந்து 16 நாட்கள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.இது குறித்து வணக்கம் மலேசியாவிடம் பகிர்ந்துக் கொண்டார் மூத்த மகனான கேப்டன் பழனி…
தாயாரின் பிறந்தநாளான ஆகஸ்ட் 9-ஆம் தேதி, அவர்களின் சொந்த ஊரான சுங்கை பட்டாணி ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயத்தில் சங்காபிஷேகம், சிறப்புப் பூஜைகள் மற்றும் அன்னதானத்துடன் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
தொடர்ந்து பெர்லிஸ், பேராக், சிலாங்கூர் ஆகிய பகுதிகளைக் கடந்து, 16வது நாளில் புகழ்பெற்ற பத்துமலை ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயத்தில் 70-ஆவது கோயில் தரிசனத்துடன் இந்தப் பயணம் இனிதே நிறைவுற்றது.
பெற்றோரே கண்கண்ட தெய்வம் என்பதை இளைய தலைமுறைக்கு உணர்த்தும் வகையில் அமைந்த இப்பயணம் குறித்து அவரது இளைய மகன் சந்திரமோகன் பகிர்ந்துகொண்டார்.பிள்ளைகளின் இத்தகைய அளப்பரிய பாசத்தையும் பக்தியையும் கண்டு ஆனந்தக் கண்ணீருடன் தாய் சேலம் முனியாண்டி நெகிழ்ச்சியடைந்தார்…
தாயின் மீது கொண்ட அன்பையும் மரியாதையையும் வெளிப்படுத்திய இந்த ஆன்மீகப் பயணம், பலரின் நெஞ்சங்களைத் தொட்டு பாராட்டைப் பெற்றுள்ளது…



