
வாஷிங்டன், ஜூலை-3 – தொழில்நுட்ப உலகின் ஜாம்பவான் நிறுவனமான மைக்ரோசோஃப்ட், 9,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அதிரடியாக அறிவித்துள்ளது.
ஜூன் வரையிலான நிலவரப்படி 228,000 முழுநேர ஊழியர்களைக் கொண்ட அந்நிறுவனம், அதிலிருந்து 4 விழுக்காட்டினரைக் குறைக்க முடிவு செய்துள்ளதே அதற்குக் காரணம்.
மே மாதம் 6 ஆயிரம் பேர் வரை பணிநீக்கம் செய்யப்பட்டதன் தொடர்ச்சியாக, தற்போது இவ்வறிவிப்பு வெளியாகியுள்ளது.
இப்புதியப் பணி நீக்கம் அதன் விற்பனைப் பிரிவு மற்றும் Xbox video game வணிகம் உட்பட உலகெங்கிலும் உள்ள பல குழுக்களை உட்படுத்தியுள்ளது.
உலகச் சந்தையின் மாறுதலுக்கேற்ப, தங்களைப் புதுப்பித்துக் கொண்டு நீடித்து நிலைத்திருக்க இந்நடவடிக்கை அவசியமாவதாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் அந்நிறுவனம் கூறியது.
அமெரிக்கக் கோடீஸ்வரர் Bill Gates மற்றும் Paul Allen இணைந்து 1975-ஆம் ஆண்டு தொடங்கிய பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனம் தான் இந்த மைக்ரோசோஃப்ட்.
50 ஆண்டுகளாக மென்பொருள், மின்னணு பொருட்கள், கணினிகள் தொடர்பான சேவைகளை உருவாக்கி அது விற்பனை செய்து வருகிறது.
ஏராளமான போட்டியாளர்கள் வந்துவிட்டதாலும், உலகமே டிஜிட்டல்மயமாகி வருவதாலும், சவால்களை எதிர்கொள்ள அவ்வப்போது இது போன்ற நடவடிக்கைகள் மூலம் மைக்ரோசோஃப்ட் தன்னை ‘சரிசெய்து’ வருகிறது