புது டெல்லி, செப்டம்பர் -2, நேற்று காலை இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்திலிருந்து தெலங்கானாவின் ஹைதராபாத்துக்குச் செல்லும் வழியில் இண்டிகோ (IndiGo) விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விமானத்தின் கழிவறையில் கண்டெடுக்கப்பட்ட காகிதத்தில் வெடிகுண்டு மிரட்டல் செய்தி எழுதப்பட்டிருந்தது.
இதையடுத்து விமானம் உடனடியாக திருப்பி விடப்பட்டு, மஹாராஷ்ட்ரா மாநிலத்தின் நாக்பூர் விமான நிலையத்தில் அது அவசரமாகத் தரையிறங்கியது.
பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டு, விமானத்தினுள் பாதுகாப்புக் சோதனைகள் நடத்தப்பட்டன.
இருப்பினும், முழுமையான சோதனைக்குப் பிறகு சந்தேகத்திற்குரிய பொருள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
பிறகு பிற்பகல் வாக்கில் விமானம் தனது பயணத்தைத் தொடர்ந்தது.
அண்மைய காலமாகவே தலைநகர் புது டெல்லி உள்ளிட்ட இந்திய நகரங்களில் பள்ளிகள், பேரங்காடிகள், விமான நிலையங்கள், மருத்துவமனைகள் ஆகியவற்றில் அடிக்கடி வெடிகுண்டு புரளிகள் கிளப்பப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், விமானங்களில் அது போன்று மிரட்டல்களை விடுப்போருக்கு, விமானங்களில் பயணிக்க 5 ஆண்டுகள் தடை விதிக்க இந்திய வான் போக்குவரத்து பாதுகாப்பு தரப்பு பரிந்துரைத்துள்ளது.