ஜார்ஜ்டவுன், செப்டம்பர் 3 – பினாங்கில் உள்ள பொது மருத்துவமனைகளில் உள்ள மூன்று மூத்த மருத்துவர்கள், Socso எனும் சமூகப் பாதுகாப்பு அமைப்பின் பல கோரல்களில் மோசடி செய்ததாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று காலை செபராங் ஜெயா மருத்துவமனையிலிருந்து இரு மருத்துவர்களும், புக்கிட் மெர்தஜாம் மருத்துவமனையிலிருந்து ஒருவரும் பிடிப்பட்டனர்.
அவர்களுடன் இணைந்து பணியாற்றி போலியான ஆவணங்களுடன் Socso கோரல்களைச் செய்து வரும் பலர் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் ஏம்.ஏ.சி.சியின் தலைவர் அசாம் பக்கி தெரிவித்திருக்கிறார்.
இதனிடையே, கடந்த ஜூலை மாதம், சொக்சோ இயலாமை கோரல்களைக் கையாளும் மருத்துவர்களை இடைநீக்கம் செய்ததாகக் கூறப்படும், பொய்யான விண்ணப்பங்கள் தொடர்புடையதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை அகற்றுமாறு மனித வள அமைச்சகத்தை செனட்டர் டாக்டர் ஆர். ஏ. லிங்கேஸ்வரன், வலியுறுத்தினார்.
பினாங்கில் உள்ள மருத்துவமனையில் இந்த சொக்சோ மோசடி கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அந்த குழு மறு அறிவிப்பு வரும் வரை இடைநீக்கம் செய்யப்பட்டதாக அவர் மக்களவையில் கூறினார்.
2018 மற்றும் 2022 ஆண்டுக்கு இடையில் 683 மோசடி பண மீட்புகள், RM43 மில்லியனை உள்ளடக்கியதாகவும், இவற்றில் 16 வழக்குகளில் ஒரு குறிப்பிட்ட மருத்துவரின் ஏமாற்று வேலைகள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு நிறுத்தப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் எத்தனை பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்றும் அந்த மோசடி வழக்குகள் பற்றிய அறிக்கைகளும் பகிரப்பட்டு, சம்பந்தப்பட்ட அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.