பெட்டாலிங் ஜெயா, செப்டம்பர்-25, ஆபாச தொனியிலான பதிவுகளை அனுப்பியது மற்றும் சமூக ஊடகப் பிரபலம் ஏஷா எனும் ராஜேஷ்வரியின் தாயாரை களங்கப்படுத்திய குற்றங்களுக்காக, லாரி ஓட்டுநருக்கு 12 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவரான 40 வயது பி.சத்திஸ்குமார், இன்று அவ்விரு குற்றச்சாட்டுகளையும் ஒப்புக் கொண்டதை அடுத்து, கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் அத்தண்டனையை விதித்தது.
ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் தலா 12 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டாலும், அவர் கைதான ஜூலை 10-ஆம் தேதியிலிருந்து ஏக காலத்தில் அவற்றை அனுபவிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
மூன்று பிள்ளைகளுக்குத் தந்தையான அந்நபர், தண்டனை அறிவிக்கப்படுவதற்கு முன், தனது அச்செயலுக்காக நீதிமன்றத்தில் மன்னிப்புக் கோரியதோடு, இனி அது மீண்டும் நிகழாமல் பார்த்துக் கொள்வதாக உறுதியும் அளித்தார்.
ஜூன் 30-ஆம் தேதி இரவு 10 மணி வாக்கில், டிக் டோக்கில் @dulal_brothers_360 என்ற கணக்கிலிருந்து மற்றவர் மனம் புண்படும்படியான ஆபாச வார்த்தைகளைப் பகிர்ந்ததாக அவர் முதல் குற்றச்சாட்டை எதிர்நோக்கினார்.
அதே நாளில், அதே நேரத்தில், அதே டிக் டோக் கணக்கிலிருந்து, ஏஷாவின் தாயார் P.R. புஷ்பா குறித்து அநாகரீகமாக பேசியதாக இரண்டாவது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
இணையப் பகடி வதையால் பாதிக்கப்பட்ட ஏஷா 4 மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.