கோலாலம்பூர், அக்டோபர்-13,
2024 கூட்டரசு பிரதேச முஃப்தி சட்ட மசோதா, சபா-சரவாக் மாநிலங்களைச் சேர்ந்த 14 அமைப்புகள் கூறுவது போல் மலேசியாவை ஓர் இஸ்லாமிய நாடாக மாற்றாது.
ஒற்றுமை அரசாங்கத்தின் பேச்சாளர் ஃபாஹ்மி ஃபாட்சில் அந்த உத்தரவாதத்தை வழங்கியுள்ளார்.
கூட்டரசு பிரதேச அளவில் முஃப்திகளின் அதிகாரங்களைத் தெளிவாக வரையறுக்கும் நோக்கிலேயே அச்சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.
அந்த உத்தேச சட்டமானது, 20 ஆண்டுகளுக்கு முன் நிறைவேற்றப்பட்ட சபா மாநில ஃபாத்வா (Fatwa) சட்டத்தைப் போன்றதே.
சபாவில் அச்சட்டம் அமுலில் இருந்து வரும் இந்த 20 ஆண்டுகளில் அங்குள்ள மக்களின் கலாச்சாரமும் வாழ்க்கை முறையும் மாறி விட்டதா என ஃபாஹ்மி கேள்வி எழுப்பினார்.
முஸ்லீம் அல்லாதோரின் சமய சம்பிரதாயங்கள் அங்கு எந்தத் தடையுமின்றி வழக்கம் போல நடைபெற்று வருவதை, தொடர்புத் துறை அமைச்சருமான ஃபாஹ்மி சுட்டிக் காட்டினார்.
எனவே, தேவையில்லாமல் ஐயத்தை எழுப்பி அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை முன் வைப்பதை யாராக இருந்தாலும் தவிர்க்க வேண்டுமென்றார் அவர்.
முஃப்தி சட்ட மசோதா, 1963-ஆம் ஆண்டு மலேசிய ஒப்பந்தத்தை மீறுவதோடு, கண்ணிமைக்கும் நேரத்தில் மலேசியாவை ஒரு முஸ்லீம் நாடாக மாற்றி விடுமென, சம்பந்தப்பட்ட அந்த 14 அமைப்புகளும் முன்னதாக கவலைத் தெரிவித்திருந்தன.