
சுங்கைப் பட்டாணி , அக் 23 – சுங்கைப் பட்டாணி, தாமான் மெரியா பத்து டுவாவில் உள்ள குடியிருப்பு பகுதியில் வாகனத்தை நகர்த்தும்படி இரு அண்டை வீட்டுக்காரர்கள் கேட்டுக்கொண்டதால் ஆத்திரம் அடைந்த இருவரில் ஒருவர் கத்தியை காட்டி சுழற்றியதோடு மற்றொருவர் காலணியை வீசியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் 63 வயதுடை ஆடவர் போலீசில் புகார் செய்ததைத் தொடர்ந்து இரண்டு சந்தேகப் பேர்வழிகள் விசாரணைக்காக கைது செய்யப்பட்டதாக கோலாமுடா மாவட்ட போலீஸ் தலைவர் வான் அசாருடின் வான் இஸ்மாயில் ( Wan Azharuddin wan Ismail ) தெரிவித்தார்.
அந்த இரு சந்தேகப் பேர்வழிகளும் போதைப் பொருளை பயன்படுத்தியிருப்பதோடு குற்றச்செயல் மற்றும் போதைப் பொருள் தொர்பான பழைய குற்றங்களிலும் சம்பந்தப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. தங்களது வீட்டிற்கு அருகே இரண்டு கார்கள் நிறுத்தப்பட்டதால் குப்பை லோரி செல்ல முடியாத நிலை இருந்ததால் அக்கார்களை நகர்த்தும்படி புகார்தாரார் கேட்டுக்கொண்டபோது அந்த இரு சந்தேகப் பேர்வழிகளும் அண்டை வீட்டுக்காரரை மிரட்டியுள்ளனர். அதோடு என்ன நடக்கும் என்பதை பாருங்கள் என்றும் ஒருவர் மிரட்டியிருக்கிறார். புகார்தாரரும் அண்டை வீட்டுக்காரரும் 30 ஆண்டு காலமாக அந்த குடியிருப்பு பகுதியில் இருந்துவருவதாகவும் தராறில் ஈடுபட்ட இரண்டு சந்தேகப் பேர்வழிகளும் மூன்று மாதங்களுக்கு முன்னர்தான் அங்கு புதிதாக குடியேறியதாக வான் அசாருடின் கூறினார்.