ரியோ டி ஜெனிரோ, நவம்பர்-8 – தென் அமெரிக்காவை வாட்டும் வரலாறு காணாத வறட்சியால் அமேசான் மலைக்காட்டு பகுதிகளில் 420,000 குழந்தைகள் உணவு மற்றும் குடிநீர் இன்றி தவிப்பதாக, ஐநாவின் குழந்தைகள் அமைப்பான UNICEF கவலைத் தெரிவித்துள்ளது.
குறிப்பாக பிரேசில், கொலம்பியா, பெரு போன்ற நாடுகளில் படகு போக்குவரத்தை நம்பியுள்ள பூர்வக்குடி மக்களும் பிற அடிதட்டு மக்களும் அதில் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.
பிரேசிலின் அமேசான் பகுதியில் மட்டும் குறைவான ஆற்று நீர் மட்டம் காரணமாக 1,700-க்கும் மேற்பட்ட பள்ளிகளும் சுகாதார கிளினிக்குகளும் மூடப்பட்டுள்ளன அல்லது அவற்றுக்கான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
கொலம்பியாவில் 130 பள்ளிகளும் பெருவில் 50 கிளினிக்குகளும் மூடப்பட்டுள்ளன.
ஆற்று போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால், குழந்தைகளுக்கான சுகாதார பராமரிப்புச் சேவைகளும், அவர்கள் பள்ளிச் செல்வதும் தடைப்பட்டுள்ளது.
போதிய உணவின்றி தவிக்கும் குழந்தைகள் ஊட்டச்சத்து பிரச்னைக்கு ஆளாவதோடு, குடிநீர் இல்லாததால் தொற்றுநோய் பரவலுக்கும் உள்ளாகலாம்.
எனவே, அம்மூன்று நாடுகளிலும் வறட்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகளை வழங்கி உதவுவதற்கு, வரும் மாதங்களில் 44 மில்லியன் ரிங்கிட் நிதி தேவைப்படுவதாக UNICEF கூறுகிறது.