கோலாலம்பூர், நவம்பர்-21 – தலிபான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் கல்வி அமைச்சின் பேராளர் குழுவின் மலேசிய வருகை குறித்து, கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சிடேக் (Fadhlina Sidek) விளக்கமளிக்க வேண்டும்.
DAP தேசியத் தலைவர் லிம் குவான் எங் அவ்வாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
இணைய ஊடகமொன்றில் பார்த்து தான் அப்பேராளர் குழுவின் வருகை குறித்து தாம் தெரிந்துகொண்டதாகக் கூறிய குவான் எங், அது பொதுவில் அறிவிக்கப்படாதது பல்வேறு கேள்விகளை எழுப்பியிருப்பதாகச் சொன்னார்.
ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக மட்டுமல்லாமல், மனித உரிமை குறிப்பாக பெண்களின் கல்வி உரிமை குறித்து அக்கறைக் கொண்டவன் என்ற வகையில் தாம் அவ்விவகாரத்தை எழுப்புவதாக குவான் எங் கூறினார்.
மலேசியாவுடன் தூதரக உறவில்லாத ஒரு நாட்டின் பேராளர் குழுவை அனுமதிக்க வேண்டிய அவசியம் வந்ததென்ன?
அதை விட, உலகில் பள்ளிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் பெண்களுக்குக் கல்வி வாய்ப்பை மறுக்கும் ஒரே நாடு இந்த ஆப்கானிஸ்தான் ஆகும்.
தலிபான்களின் அக்கொள்கை, பாலின வெறிக்குச் சமமாகும் என்பதால், ஆப்கானிஸ்தான் பேராளர் குழுவின் வருகைக் குறித்து ஃபாட்லீனா மலேசிய மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டுமென, குவான் எங் வலியுறுத்தினார்.
அந்த ஆப்கானிஸ்தான் பேராளர் குழுவுடன் கல்வி தொடர்பான விஷயங்கள் பரிமாறப்பட்டதாக ஃபாட்லீனா கூறியதாக முன்னதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.