கோலாலம்பூர், நவம்பர்-27, உலகின் 18 பணக்காரத் தலைவர்கள் பட்டியலில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமும் இடம் பிடித்துள்ளார்.
Yahoo! Finance தர வரிசைப் படி 2.4 மில்லியன் டாலர் அல்லது சுமார் 10.7 மில்லியன் ரிங்கிட் நிகர சொத்து மதிப்புடன் அன்வார் 17-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
2022 நவம்பரில் அன்வார் அறிவித்த சொத்துக்களில், ரொக்கம் மற்றும் முதலீட்டு வடிவிலான 779,183 ரிங்கிட்டும் உள்ளடங்கும்.
பிரதமரின் பெரும்பாலான சொத்தான 9.5 மில்லியன் ரிங்கிட்டானது, ஒரு வீட்டையும், 3 நிலங்களையும் அடக்கியுள்ளது.
அன்வாரைத் தவிர்த்து அப்பட்டியலில் இடம் பெற்றுள்ள ஆசியான் தலைவர்களாக பிலிப்பின்ஸ் அதிபர் போங் போங் மார்கோஸ் (Bongbong Marcos), சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் (Lawrence Wong) இருவரும் திகழ்கின்றனர்.
5 மில்லியன் அமெரிக்க டாலருடன் வோங் 15-வது இடத்திலும், 3.6 மில்லியன் டாலருடன் மார்கோஸ் 16-வது இடத்திலும் உள்ளனர்.
எதிர்பார்க்கப்பட்டது போலவே ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் (Vladimir Putin) 200 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
அவருக்கும் இரண்டாமிடத்தைப் பிடித்துள்ள வட கொரியத் தலைவர் கிம் ஜோங் அங்கிற்குமே (Kim Jong-un) எட்ட முடியாத அளவுக்கு இடைவெளி உள்ளது.
5 பில்லியன் டாலர் மதிப்புடன் அவர் இரண்டாம் இடத்தில் பின் தங்கியுள்ள வேளை, சீன அதிபர் சீ’ சின் பிங் (Xi Jinping) 1.5 பில்லியன் டாலருடன் மூன்றாமிடத்தில் உள்ளார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (Joe Biden) 10 மில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 13-வது இடத்தில் உள்ளார்.
அவரை விட அதிகமாக, யுக்ரேனிய அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி (Volodymyr Zelensky) 20 மில்லியன் டாலருடன் 12-வது இடத்தை வகிக்கிறார்.