வாஷிங்டன், டிசம்பர்-7,நீதிமன்ற மேல்முறையீட்டில் தோல்விக் கண்டிருப்பதால், வீடியோ பகிர்வுத் தளமான டிக் டோக் அமெரிக்காவில் தடைச் செய்யப்படுவதை நெருங்கி வருகிறது.
சீனாவைத் தளமாகக் கொண்ட தாய் நிறுவனத்திலிருந்து ஜனவரி 19-ஆம் தேதிக்குள் பிரிந்து விட வேண்டுமென, டிக் டோக்கிற்கு அமெரிக்கா முன்னதாக காலக்கெடு விதித்தது.
பயனர்களின் தரவுகளைச் சேகரிப்பதோடு வேவு பார்க்கவும் பெய்ஜிங்கை டிக் டோக் அனுமதிப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது.
அதனை Bytedance நிறுவனம் திட்டவட்டமாக மறுத்தாலும், அமெரிக்கா விடுவதாக இல்லை.
ஜனவரி 19-குள் டிக் டோக்கை விற்கா விட்டால், அமெரிக்க App Store மற்றும் இணையத்தில் டிக் டோக்கை ஒரேடியாக தடைச் செய்யும் உத்தரவில், அதிபர் ஜோ பைடனும் ஏப்ரலில் கையெழுத்திட்டார்.
அந்த கட்டாய உத்தரவை எதிர்த்து நீதிமன்றம் சென்ற டிக் டோக், தற்போது அதில் தோல்விக் கண்டிருப்பதால், அமெரிக்க மண்ணை விட்டு அது சீக்கிரமே வெளியேற வேண்டி வரலாம்.
ஒருவேளை டிக் டோக் தடைச் செய்யப்பட்டால், அமெரிக்க -சீன உறவை பாதிக்கக்கூடும்.
எனினும், கடைசி முயற்சியாக அமெரிக்க உச்ச நீதிமன்றத்தை நாட டிக் டோக் முடிவுச் செய்துள்ளது.
அமெரிக்க மக்களின் பேச்சுரிமையை நிலைநாட்டியதில், உச்ச நீதிமன்றத்திற்கு பெரும் வரலாறு இருப்பதால் அதனை டிக் டோக் முழுமையாக நம்பியுள்ளது.
இது தவிர, அடுத்த மாதம் அதிபராக பதவியேற்கவுள்ள டோனல்ட் டிரம்பையும் சாத்தியமில்லா பங்காளியாக்கிக் கொள்ள பெய்ஜிங் திட்டமிட்டுள்ளது.
டிக் டோக் தடைச் செய்யப்பட்டால் நன்மையடையப் போவது என்னமோ, facebook-கின் தாய் நிறுவனமான Meta தான்.
Meta-வுக்கும் டிரம்புக்கும் ஏற்கனவே உரசலிருப்பதால், அதைப் பயன்படுத்தி டிக் டோக் தடைச் செய்யப்படாமலிருப்பதை பார்த்துக் கொள்ள சீனா நினைக்கிறது.
2021 ஜனவரி 6-ம் தேதி வாஷிங்டனில் டிரம்ப் ஆதரவாளர்கள் கலவரத்தில் இறங்கியதை அடுத்து, டரம்புக்கே facebook-கில் தடை விதிக்கப்பட்டது நினைவிருக்கலாம்.