செப்பாங், ஜனவரி-1, லாவோஸ் நாட்டில் மனித விற்பனை கும்பலிடம் சிக்கிய 3 மலேசியர்கள், love scam எனப்படும் காதல் மோசடியில் ஈடுபட கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர்.
மலாக்காவைச் சேர்ந்த அம்மூவரும் மலேசியர்களை மட்டுமல்ல, ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, அமெரிக்க நாட்டவர்களையும் வேலை வாய்ப்பு மோசடியில் சிக்க வைக்க பணிக்கப்பட்டுள்ளனர்.
லாவோசில் எப்படியோ காப்பாற்றப்பட்டு நேற்று மாலை KLIA வந்திறங்கிய போது, 20 வயதிலான அம்மூவரும் அத்தகவல்களைப் பகிர்ந்துகொண்டனர்.
தாய்லாந்தில் 4,000 முதல் 9,000 ரிங்கிட் வரையிலான மாதச் சம்பளத்தில் வாடிக்கையாளர் தொடர்பு அதிகாரி வேலையிருப்பதாக, facebook விளம்பரத்தைப் பார்த்து அம்மூவரும் கவரப்பட்டுள்ளனர்.
நம்பி தாய்லாந்து போனவர்களை மோசடி கும்பல்கள் லாவோசுக்கு நாடு கடத்தி விட்டன.
அங்கு குறைந்த சம்பளத்தில் இணைய மோசடி வேலைகளில் ஈடுபட வைக்கப்பட்டு, இலக்கை அடையவில்லை எனக் கூறி சம்பளத்திலும் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.
வேறு வழியின்றி லாவோசில் ஹலால் அல்லாத உணவையும் அவர்கள் சாப்பிட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில், மலேசிய அனைத்துலக மனிதநேய அமைப்பான MHO முயற்சியில், மோசடி கும்பல்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு பிணைப்பணம் எதுவுமின்றி அம்மூன்று இளைஞர்களும் தாயகம் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
அடுத்த வாரம் மேலும் 9 பேர் தாயகம் திரும்புவர் என எதிர்பார்க்கப்படுகிறது.