Latestமலேசியா

பாங்கியில் ‘தில்லாக’ போலி சுடும் ஆயுதங்களை வெளிப்படையாக விற்று வந்த ஆடவர் சிக்கினார்

பாங்கி, ஜனவரி-6, Gel Blasters எனப்படும் போலி சுடும் ஆயுதங்கள் மீதான அண்மைய அதிரடிச் சோதனைகளைக் கண்டு கொள்ளாதவராய், சிலாங்கூர் பண்டார் பாரு பாங்கியில் உள்ள தனது கடையில் பொதுமக்களுக்கு அவற்றை வெளிப்படையாகவே விற்று வந்த ஆடவர், ஒருவழியாக பிடிபட்டுள்ளார்.

சீருடை அல்லாமல் சாதாரண உடையில் வாடிக்கையாளர் போல் கடைக்கு வந்த போலீஸிடம் 40 வயது அவ்வாடவர் சிக்கினார்.

‘போலி சுடும் ஆயுதங்கள் எவருக்கு வேண்டுமானாலும் விற்கப்படும்’ என பொதுமக்கள் கண்ணில் படும் வகையில் அறிவிப்புப் பலகையை அவர் தொங்க வைத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

மாறுவேடத்திலிருந்த போலீஸ் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்ட போதும் அந்நபர் அசரவில்லை.

தான் விற்பது வெறும் துப்பாக்கி பொம்மையே என அவர் வாதாடியுள்ளார்.

எனினும் விசரணையில், போலி சுடும் ஆயுதங்களைத் துடைத்தொழிக்க போலீஸ் போராடி வருவது தமக்குத் தெரியுமென்றும், ஆனால் கையிருப்பை விற்றுத் தீர்ப்பதை விட தனக்கு வேறு வழியில்லை என்றும் அவர் காரணம் கூறினார்.

அவரின் கடையில் நடத்தப்பட்ட சோதனையில், போலீஸ் பயன்படுத்தும் Heckler & Koch MP5 ரக ஒத்திருக்கும் பொருள் உட்பட105 போலி சுடும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

வாடிக்கையாளர்கள் தங்களின் ‘ஆயுதங்களைத்’ தரமுயர்த்த ஏதுவாக பல்வேறு உபரிப் பாகங்களையும் அவர் விற்று வந்துள்ளார்.

இதற்கு முன் வாசனைத் திரவியங்களை விற்று வந்த அவ்வாடவர், இந்த போலி சுடும் ஆயுதங்களுக்கு இருக்கும் மவுசைப் பார்த்து சில மாதங்களுக்கு முன்னர் தான் வியாபாரத்தை மாற்றியுள்ளார்.

இந்த ‘பொம்மை’ துப்பாக்கிகளை விற்பதன் மூலம் ஒரு நாளைக்கு மிக எளிதாக 300 ரிங்கிட்டிலிருந்து 400 ரிங்கிட் வரையில் அவர் வருமானம் ஈட்டி வந்துள்ளதும் கண்டறியப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!