சைபர்ஜெயா, ஜனவரி 6 – செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான திட்டங்கள், இந்த ஆண்டில் இலக்கவியல் அமைச்சின் முக்கிய முன்னுரிமையாக இருக்கும் என்று அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.
தேசிய செயற்கை நுண்ணறிவு அலுவலகத்தின் மூலம் செயல்படுத்தப்படும் இந்த விழிப்புணர்வு திட்டங்கள், இணையப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வையும் முன்வைப்பதாக இருக்கும் என அவர் கூறினார்.
கல்வி அமைச்சு மற்றும் உயர் கல்வி அமைச்சுடன் இணைந்து, மாணவர்களுக்குச் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்யும் திட்டங்கள் உருவாக்கப்படவுள்ளன.
அதற்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று, அண்மையில் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான தேசிய நிலை தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டியின் பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டபோது , அமைச்சர் இவ்வாறு கூறினார்.
நாடு தழுவிய நிலையிலான இப்போட்டிக்கு மானியம் வழங்குவதாகவும் அமைச்சர் இந்நிகழ்ச்சியில் அறிவித்திருந்தார்.
திதியான் டிஜிட்டல் திட்டம், மல்டிமீடியா பல்கலைக்கழகம், கோலகிள்ளான் இந்து இளைஞர் இயக்கம், தமிழ் டெக்.மை (TamilTech.My), மலேசிய தலைமையாசியர் மன்றம் ஆகிய அமைப்புகள் இணைந்து இந்தப் போட்டியின் முன்னெடுப்பில் கைக்கோர்ந்தன.
முதல் கட்டமாக மாநில ரீதியில் இணையம் வழியாக இணையத்தளம் வடிவமைத்தல், சிறுவர் நிரலாக்கம், இருபரிமான அசைவூட்டல், வரைதல், தகவல் தொடர்புத் தொழில்நுட்பம் ஆகிய ஐந்து போட்டிகள் நடைபெற்றன.
நாடாளவிய நிலையில் ஏறக்குறைய 2,100 க்கும் மேற்பட்ட தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பங்கு பெற்றனர்.
இதில் வெற்றிபெற்ற 240 மாணவர்கள் முன்தினம் நடைபெற்ற இறுதிச் சுற்றில் கலந்து கொண்டதாக திதியான் டிஜிட்டல் திட்டத்தின் தலைவர் குணசேகரன் கருப்பையா தெரிவித்தார்.
இறுதிச் சுற்றில் பங்கு பெற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அமைச்சர் பரிசுகளையும் நற்சான்றிதழ்களையும் வழங்கி கெளரவித்தார்.