
கோலாலம்பூர், ஜனவரி-16 – தலைநகரின் முக்கிய வர்த்தக இடங்களான ஜாலான் பெராங்கான் மற்றும் புக்கிட் பிந்தாங்கில் பல்வேறு குற்றங்களுக்காக 30 வியாபாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
DBKL எனப்படும் கோலாலம்பூர் மாநகர மன்றம், தனது சுகாதார மற்றும் சுற்றுச் சூழல் துறை வாயிலாக அந்த குற்றப்பதிவுகளை வெளியிட்டது.
நேற்று மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனைகளில், வியாபாரப் பொருட்களை அனுமதியின்றி பொது இடங்களில் வைத்தது, பொது இடங்களிலும் கால்வாய்களிலும் குப்பைகளைக் கொட்டியது, உணவுக் கழிவுகளையும் குப்பைகளையும் கொட்டி கால்வாய்களின் அடைப்புக்கு வித்திட்டது என வியாபாரிகளின் குற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இதையடுத்து 1974-ஆம் ஆண்டு சாலை, கால்வாய் மற்றும் கட்டடச் சட்டத்தின் கீழ் நோட்டீஸ்கள் வெளியிடப்பட்டன.
வர்த்தகத் தளங்களின் தூய்மையைப் பேண வேண்டியது வியாபாரிகளின் கடமையாகும்; சுத்தமின்மையால் வியாபாரத்தின் தோற்றமே பாதிக்கப்படலாம்.
எனவே, பொறுப்பைத் தட்டிக் கழித்து, தத்தம் வர்த்தகத்துக்கும் மாநகரின் தோற்றத்துக்கும் அவப்பெயரைத் தேடித் தர வேண்டாமென, DBKL வியாபாரிகளைக் கேட்டுக் கொண்டது.