
சிங்கப்பூர், ஜனவரி-17,மலேசியத் தயாரிப்பான Kacang Koya எனும் நிலக்கடலைக் கேக்குகள் சிங்கப்பூர் சந்தைகளிலிருந்து மீட்டுக் கொள்ளப்படுகின்றன.
அவற்றின் பொட்டலங்களின் லேபல்களில் அறிவிக்கப்படாத பால், பரவலாக ‘மணல் கேக்’ என அழைக்கப்படும் அத்தின்பண்டத்தில் கலக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டிருப்பதால், சிங்கப்பூர் உணவு பாதுகாப்பு நிறுவனமான SFA அவ்வுத்தரவை வெளியிட்டது.
பால், ஒவ்வாமைக்கு அறியப்பட்டதென்பதால், பாதிக்கப்பட்ட பொருளை சந்தையிலிருந்து மீட்டுக்கொள்ளுமாறு அதன் இறக்குமதியாளர் உத்தரவிடப்பட்டுள்ளார்.
சிங்கப்பூரின் உணவு விதிமுறைகளின் கீழ், ஒவ்வாமை உள்ள பயனர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, பால் போன்ற அதிக உணர்திறனை ஏற்படுத்தக்கூடிய அனைத்து பொருட்களையும் உணவுப் பொருட்களின் லேபல்களில் அறிவிக்க வேண்டும்.
பால் பொதுவில் உணவுப் பாதுகாப்பு அபாயத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும், ஒவ்வாமை அல்லது சகிப்புத்தன்மை இல்லாத நபர்களுக்கு அது தீங்கு விளைவிக்கும் என்பதை SFA தனது facebook பக்கத்தில் சுட்டிக் காட்டியது.
அந்த ‘மணல் கேக்குகளை’ வாங்கியவர்களில், பால் ஒவ்வாமை அல்லது சகிப்புத்தன்மை பிரச்னையுடையவர்கள், அதை உட்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பால் ஒவ்வாமை உள்ளவர்கள் தெரியாமல் அதனை உட்கொண்டிருந்தால், அவர்கள் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டுமென SFA வலியுறுத்தியது.