
ஜோர்ஜ்டவுன், ஜனவரி-23, பினாங்கு, தீமோர் லாவோட் மாவட்டத்தில் பாரம்பரிய முறையில் கிச்சாப் மற்றும் சில்லி சாஸ் தயாரிக்கும் 2 தொழிற்சாலைகளை உடனடியாக 14 நாட்களுக்கு மூடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
தொழிற்சாலை வளாகத்தில் ஆங்காங்கே எலியின் கழிவுகள் கண்டுபிடிக்கப்பட்டதே அதற்குக் காரணம்.
இதில் அதிர்ச்சி என்னவென்றால், 120 ஆண்டுகள் பழைமை வாய்ந்த அவ்விரு தொழிற்சாலைகளுக்கும் இது போன்ற உத்தரவு கிடைப்பது இது முதன் முறையல்ல; கடந்த 10 ஆண்டுகளில் 7 தடவை அவ்வுத்தரவுப் பிறப்பிக்கப்பட்டு விட்டது.
என்ற போதிலும் அவை தொடர்ந்து தூய்மை பிரச்னையில் சிக்கி வருகின்றன.
அண்மையில் சோதனைக்குச் சென்ற சுகாதார அதிகாரிகள், சோயா கச்சான்கள் ஊற வைக்கப்பட்ட கூடைகள் கழிவறைக்கு வெளியே தரையிலிருந்ததைக் கண்டனர்.
தரையில் பாசிப் பிடித்து பார்ப்பதற்கே அருவருப்பாக இருந்தது;
அதை விட மோசமாக, கச்சா உணவுப் பொருட்களை வைக்கும் இடத்தில் எலியின் கழிவுகள் காணப்பட்டன; சில்லி சாஸ் வைக்குமிடத்தில் எலிப் பொறியே இருந்தது.
தொழிற்சாலையின் மேற்பார்வையாளரான 60 வயது முதியவர், உரிமையாளர் வெளிநாட்டில் இருப்பதாக அதிகாரிகளிடம் கூறினார்.
பொருட்கள் வாடிக்கையாளர்களின் கைகளுக்குச் சென்று சேருவதை உறுதிச் செய்வது மட்டுமே தனது வேலையென்றும், மற்றபடி தொழிற்சாலை விவகாரத்தில் தனக்குத் தொடர்பில்லை என்றும் அவர் மழுப்பியுள்ளார்.
அவ்விரு தொழிற்சாலைகளில் தயாராகும் கிச்சாப், சில்லி சாஸ், தவுச்சு ஆகியவை பினாங்கு மற்றும் வட மாநிலங்களுக்கு மட்டுமே விநியோகிப்படுவதாகத் தெரிய வந்தது.