
தைப்பிங், ஜனவரி-27, தைப்பிங் சிறைச்சாலையில் ஏராளமான கைதிகள் மோசமாகத் தாக்கப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பில், 82 பேரது வாக்குமூலங்களைப் போலீஸ் பதிவுச் செய்துள்ளது.
அவர்களில் 2 சிறைக் காவலர்களும் அடங்குவர்.
எஞ்சிய 80 பேரும் கைதிகள் மற்றும் தடுப்புக் காவலில் உள்ளவர்கள் என, பேராக் போலீஸ் இடைக்காலத் தலைவர் துணை ஆணையர் Zulkafli Sariaat தெரிவித்தார்.
ஜனவரி 17 முதல் ஏராளமான புகார்கள் கிடைக்கப் பெற்றதன் அடிப்படையில் விசாரணை நடைபெறுவதாக அவர் சொன்னார்.
கைதிகள் தாக்கப்படுவதாகக் கூறி முன்னதாக தைப்பிங் சிறைச்சாலை முன்புறம் உரிமைக் கட்சியின் தலைமையில் பேரணி நடைபெற்றது.
60-கும் மேற்பட்ட சிறை வார்டன்கள் 100-க்கும் மேற்பட்ட கைதிகளைத் மோசமாகத் தாக்கி காயம் விளைவித்ததாகவும், அதில் ஒரு கைதி இறந்தே போனதாகவும் பேரணிக்குத் தலைமையேற்ற பேராசிரியர் Dr பி.ராமசாமி கூறினார்.
50-க்கும் மேற்பட்ட குடும்ப உறுப்பினர்களும் வாரிசுகளும் அங்குத் திரண்டிருந்த நிலையில், பிரதமரும் உள்துறை அமைச்சரும் விரிவான விசாரணைக்கு உத்தரவிட அவர் வலியுறுத்தினார்.
வழக்கமான அட்டவணைப் படி கைதிகளைப் பார்க்க தாங்கள் இப்போது அனுமதிக்கப்படுவதில்லை என்றும் குடும்பத்தார் குற்றம் சாட்டினர்.