
கோலாலம்பூர், ஜனவரி-30, போரினால் பாதிக்கப்பட்ட காசா மக்களின் துயரில் மற்ற நாடுகளைப் போல நாமும் பங்குக்கொள்கிறோம்.
அவர்கள் அதிலிருந்து மீண்டு வர பிராத்திப்போம்; ஆனால் அதே சமயம் உள்நாட்டு தேவைகளும் நமக்கு முக்கியம்.
மலேசியர்களையும் அரசாங்கம் பார்க்க வேண்டுமென பெர்சாத்து கட்சியில் மலாய்க்காரர் அல்லாத உறுப்பினர்களுக்கான பெர்செக்குத்து பிரிவின் துணைத் தலைவர் டத்தோ ஆர். ஸ்ரீ சஞ்சீவன் கேட்டுக் கொண்டார்.
காசாவின் மறு நிர்மாணித்தலின் ஒரு பகுதியாக அங்கு பள்ளிக்கூடம், மருத்துவமனை மற்றும் மசூதியை மலேசியா கட்டவிருப்பதாக பிரதமர் கூறியிருந்தது குறித்து சஞ்சீவன் தனது X தளத்தில் அவ்வாறு குறிப்பிட்டார்.
காசாவில் கவனம் செலுத்தும் முன் மலேசியர்களுக்கான உங்களின் வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்;
எண்ணெய் விலைக் குறைப்பு, கார் விலைக் குறைப்பு, இலவசக் கல்வி, PTPTN அகற்றம் ஆகிய வாக்குறுதிகள் நிறைவேறி விட்டனவா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
நீங்கள் மலேசியாவுக்குத் தான் பிரதமர், காசாவுக்கு அல்ல என சஞ்சீவன் சுட்டிக் காட்டினார்.
ஜப்பான் அரசாங்கத்துடன் இணைந்து காசாவில் மறு நிர்மாணிப்புப் பணிகளை மலேசியா முன்னெடுக்கவிருப்பதாக வீடியோ பதிவு வாயிலாக முன்னதாக டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்திருந்தார்.