Latestமலேசியா

நாளை வெள்ளிக்கிழமை மதியம் 3.00 மணிக்கு பத்துமலை திருத்தலத்திற்கு வருகை புரிகிறார் பிரதமர் அன்வார்

கோலாலம்பூர், பிப் 6 – கோலாலம்பூர் ஶ்ரீ மஹா மாரியம்மன் தேவஸ்தான நிர்வாகத்தின் அழைப்பின் பேரில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாளை பிப்ரவரி 7 ஆம்தேதி, வெள்ளிக்கிழமை மதியம் 3 மணிக்கு பத்துமலை திருதளத்திற்கு வருகை புரியவிருக்கிறார்.

முதல் முறையாக பத்துமலைக்கு வருகை புரியும் பிரதமர் அன்வாருக்கு மாலை அணிவித்து வரவேற்பு நல்கப்படும் என கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய தேவஸ்தானத்தின் தலைவர் டான் ஸ்ரீ R.நடராஜா தெரிவித்துள்ளார்.

இந்துக்களின் முக்கிய திருத்தலமாக மட்டுமின்றி உலக வரைப்படத்தில் மலேசியாவின் முக்கிய சுற்றுலா மையமாகவும் திகழும் பத்துமலையில் அடுத்த வாரம் பிப்ரவரி 11ஆம் தேதி தைப்பூச திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படவிருக்கும் இவ்வேளையில் பிரதமரின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

பத்துமலையில் தற்போது மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணிகளை பார்வையிடும் வகையில் பிரதமர் பத்துமலையில் சுமார் ஒரு மணி நேரம் செலவிடுவார் என நடராஜா கூறினார்.

ஏற்கனவே பத்துமலையில் மேற்கொள்ளப்பட்டுவரும் மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்த விவரங்களை ம.இ.காவின் தேசிய தலைவரான டான் ஸ்ரீ S.A விக்னேஸ்வரன் பிரதமரின் நேரடி கவனத்திற்கு கொண்டுச் சென்றதோடு ஒரு பிரமாண்ட பல்நோக்கு மண்டபம், ஒரு சிறிய மண்டபம், கார் நிறுத்துமிடம் உட்பட பல வசதிகளை மேம்படுத்தி வருவது குறித்தும் அவருக்கு விளக்கம் அளித்துள்ளார்.

இதற்கு அரசாங்கத்தின் தேவையான நிதி ஒதுக்கீடும் ஒத்துழைப்பும் தேவையென பிரதமருடனான தனது சந்திப்பின்போது விக்னேஸ்வரன் வலியுறுத்தியிருந்தார். எனவே இது தொடர்பான நல்ல முடிவுகள் பத்துமலை நிர்வாகத்துடனான நாளைய சந்திப்பில் டத்தோ ஸ்ரீ அன்வார் தெரிவிப்பார் என்ற நம்பிக்கையும் தமக்கு இருப்பதாக நடராஜா தெரிவித்தார். இதனிடையே, பிரதமரை வரவேற்க டான் ஶ்ரீ நடராஜா பொதுமக்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!