
லண்டன், பிப்ரவரி-14 – 2034 உலகக் கிண்ணக் கால்பந்து போட்டி நெடுகிலும் மதுபான விற்பனைக்கும் பயன்பாட்டுக்கும் தடை விதிக்கப்படுவதாக, போட்டியை ஏற்று நடத்தும் நாடான சவூதி அரேபியா அறிவித்துள்ளது.
குளிர்பானங்கள் மட்டுமே விளையாட்டரங்குகளில் விற்கப்படும்; மதுபானங்களை அரங்கினுள் கடத்திச் செல்ல முயல்பவர்களுக்கு கடும் தண்டனைக் காத்திருக்கிறது.
உலகக் கிண்ணமே என்றாலும், மதுபானம் தொடர்பான இஸ்லாமியச் சட்டங்களை தளர்த்த முடியாது என, பிரிட்டனுக்கான சவூதி அரேபிய தூதர் இளவரசர் காலிட் பின் பண்டார் அல் சவுட் கூறினார்.
அரங்கங்கள் மட்டுமின்றி, ஹோட்டல்கள், கால்பந்து இரசிகர்கள் தங்கும் மற்றும் குழுமியிருக்கும் இடங்களிலும் மதுபானங்களுக்குத் தடை விதிக்கப்படுகிறது.
மதுபானம் இல்லாமலேயே பல்வேறு கேளிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடலாம்; எனவே உபசரணை நாட்டின் கலாச்சரத்தை வெளியிலிருந்து வருபவர்கள் மதிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
இவ்வறிவிப்பின் மூலம், உலகக் கிண்ண இறுதிச் சுற்று வரலாற்றில் மதுபானங்களுக்கு முழுத் தடை விதிக்கும் முதல் நாடாக சவூதி அரேபியா திகழவிருக்கிறது.
இதற்கு முன் 2022 கட்டார் உலகக் கிண்ண போட்டியின் போது, குறிப்பிட்ட இடங்களில் அனுமதிப் பெற்ற ஹோட்டல்களில் மட்டும் மதுபானங்களை விற்க அனுமதி வழங்கப்பட்டது.