
கோலாலம்பூர், பிப்ரவரி-20 – 2020 முதல் 2023 வரை, மொத்தம் 1,217 நிபுணர்கள், 8,000 க்கும் மேற்பட்ட ஒப்பந்த மற்றும் நிரந்தர சுகாதாரப் பணியாளர்கள், சுகாதார அமைச்சிலிருந்து வெளியேறியுள்ளனர்.
அவர்களில், 5,702 ஒப்பந்த மற்றும் நிரந்தர மருத்துவ அதிகாரிகள், 2,141 ஒப்பந்த மற்றும் நிரந்தர தாதியர்கள், 295 ஒப்பந்த மற்றும் நிரந்தர உதவி மருத்துவ அதிகாரிகள் அடங்குவர்.
இதனிடையே, அரசாங்க சுகாதாரப் பராமரிப்பு மையங்களின் சேவையை நாடிய நோயாளிகளின் எண்ணிக்கை, 2020-லிருந்து 2023 வரை 18 விழுக்காடு அதிகரித்துள்ளது.
2020-ல் நோயாளிகளின் வருகை 57 மில்லியனாக இருந்த நிலையில் 2023-ல் அது 68 மில்லியனாக அதிகரித்தது.
அதற்கேற்ப, அரசாங்க சுகாதார மையங்களில் ஆள் சேர்ப்பு நடத்தி காலியிடங்களை நிரப்பப்படுமென அமைச்சர் டத்தோ ஸ்ரீ Dr சுல்கிப்ளி அஹ்மாட் கூறினார்.
2019 மற்றும் 2024-ஆம் ஆண்டுகளுக்கு இடையில் சுகாதார அமைச்சு 13,879 ஒப்பந்த மருத்துவ அதிகாரிகளை நிரந்தரமாக நியமித்தது.
இவ்வாண்டு 3,200 ஒப்பந்த மருத்துவ அதிகாரிகளை நிரந்தரமாக நியமிக்க அது இலக்குக் கொண்டுள்ளது.