
கோலாத் திரெங்கானு, பிப் 20 – கெமமானுக்கு அருகே கிழக்குக்கரை நெடுஞ்சாலை 2 இல் 293.8ஆவது கிலோமீட்டரில் ஏற்பட்ட சாலை விபத்தினால் கீழே சிதறி விழுந்த முட்டைகளை எடுத்துச் சென்றவர்கள் அதனை உட்கொள்ள வேண்டாமென பொதுமக்களுக்கு ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த முட்டைகளில் ஆபத்தான கிருமிகள் கலந்திருக்கலாம் என்பதால் அதனை உட்கொள்ள வேண்டாமென திரெங்கானு மலேசிய பல்கலைக்கழகத்தின் உணவு உயிர்வேதியல் மற்றும் உயிர் இயற்பியல் விரிவுரையாளர் , இணை பேராசிரியர் Dr. Mohamad Khairi Mohd. Zainol கூறினார்.
குறிப்பாக உடைந்த கோழி முட்டைகள், சால்மோனெல்லா (Salmonella ), எஸ்கெரிச்சியா ஈ.கோலி, (Escherichia Coli (E.Coli) ) உட்பட பல்வேறு பாக்டிரியாக்களை கொண்டிருக்கலாம் என அவர் சுட்டிக்காட்டினார்.
கோழி முட்டைகளால் சுற்றுச்சூழல் மாசுபடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட பாக்டீரியாக்கள் கோழியின் முட்டை ஓட்டில் உள்ள விரிசல்கள் வழியாக ஊடுருவ முடியும் என்று அவர் தெரிவித்தார்.
நேற்று விடியற்காலை 5.30 மணியளவில் கெமமான் , Chukai டோல் பிளாசா வெளியேறும் பகுதியில் லாரி விபத்துக்குள்ளானதை தொடர்ந்து அதிலிருந்து கீழே விழுந்து சிதறிய 78,000 கோழி முட்டைகளை சேகரிக்க மக்கள் திரண்டது குறித்து டாக்டர் முகமட் கைரி கருத்துரைத்தார்.