
கோலாலம்பூர், பிப் 20 – மாநிலத்தில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு ஒரு நிபந்தனையாக கலை நிகழ்ச்சி நடைபெறும் இடங்களின் நுழைவாயிலில் “போதைப்பொருள் வேண்டாம்” என்ற வாசகத்துடன் கூடிய எச்சரிக்கை பலகைகள் அல்லது அட்டைகளை வைக்கும்படி சிலாங்கூர் போலீசார் பரிந்துரைத்துள்ளனர்.
பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் போதைப் பொருளை பயன்படுத்துவதை தடுப்பதற்கு மாநில அரசாங்கம், வீடமைப்பு மற்றும் ஊராட்சித்துறை அமைச்சிடம் இம்மாதம் முன்மொழியப்பட்ட பரிந்துரைகளில் இதுவும் ஒன்று என சிலாங்கூர் போலீஸ் தலைவர் உசேய்ன் உமார் கான் ( Hussein Omar Khan ) தெரிவித்தார்.
கலைநிகழ்சி ஏற்பாட்டாளர்கள் முன்பு இதுபோன்ற நினைவூட்டல்களை டிக்கெட்டுகளில் மட்டுமே வைத்தனர் என்று அவர் கூறினார்.
இது மறைமுகமாக கலைநிகழ்ச்சிகளில் போதைப்பொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த உதவும் என இன்று ஷா ஆலமில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் உசேய்ன் கூறினார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் புத்தாண்டை வரைவேற்க Bandar Sunwayயில் நடைபெற்ற PinkFish கலைநிகழ்ச்சியில் நான்கு நபர்கள் இறந்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.