
பிரயாக்ராஜ், பிப்ரவரி-26 – 45 நாட்களாக நடைபெற்று வரும் உலகின் மிகப் பெரிய ஆன்மீக ஒன்றுக்கூடலான மகா கும்பமேளா, சிவராத்திரி நாளான இன்றோடு முடிவுக்கு வருகிறது.
பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் வரலாறு காணாத அளவுக்கு இதுவரை 63 கோடியே 36 லட்சம் பேர் புனித நீராடியுள்ளனர்.
புனித நீராடியவர்களில் இந்திய அதிபர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, பூட்டான் நாட்டின் அதிபர், பல மாநில முதல் அமைச்சர்கள், அமைச்சர்கள், கோடீஸ்வரர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்டோரும் அடங்குவர்.
தொடக்கத்தில் 40 கோடி பேர் மட்டுமே கூடுவர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மலேசியர்கள் உட்பட உலகம் முழுவதும் இருந்து 60 கோடிக்கும் மேல் பக்தர்களும் சுற்றுப்பயணிகளும் திரண்டதால் கும்பமேளா களைக்கட்டியது.
144 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே இந்த மகா கும்பமேளா நடக்கும் என்பதும், கூட்டம் அலைமோதியதற்கு காரணமாகும்.
இந்நிலையில் இன்றைய சிவராத்திரி நீராடலுடன் மகா கும்பமேளா நிறைவடைகிறது.
கடைசி பூஜை காசி விஸ்வநாதர் கோயிலில் நடைபெறும்.
கும்ப மேளா நிறைவைத் தொடர்ந்து, அங்கு குட்டி நகரமாக அமைக்கப்பட்டிருந்த தற்காலிகக் குடியிருப்புகள் அகற்றப்படும்.
ஜனவரி 13 முதல் உலகின் கவனத்தை ஈர்த்திருந்த பிரயாக்ராஜ் நாளை முதல் மெல்ல வழக்க நிலைக்குத் திரும்பும்.