
கோலாலம்பூர், மார்ச்-6 – தைப்பூசக் காவடியாட்டத்தின் போது இந்துக்கள் உச்சரிக்கும் ‘வேல் வேல்’ சுலோகத்தை, மதுபோதை மற்றும் பேயாட்டத்துடன் தொடர்ப்புபடுத்தி பேசியுள்ள இஸ்லாமிய மத போதகர் சம்ரி வினோத்தை, மஇ.கா தேசியத் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன் கடுமையாகச் சாடியுள்ளார்.
சம்ரியின் கருத்து பொறுப்பற்றது என்பதோடு, இந்துக்களின் மனதைப் புண்படுத்தும் செயல்; இதனால் மத நல்லிணக்கம் பாதிக்கப்படுகிறது.
3R எனப்படும் இனம், மதம், ஆட்சியாளர்களை நிந்திக்கும் இச்செயல் தண்டிக்கப்பட வேண்டும் என, தீவிர முருக பக்தரும் பத்து மலை தைப்பூசத்தில் தவறாது காவடி ஏந்தி நேர்த்திக்கடன் செலுத்துபவருமான சரவணன் கூறினார்.
இந்துக்களை சம்ரி இழிவுப்படுத்தி பேசுவது இது முதன் முறையல்ல; தொடர்ந்து அச்செயலில் ஈடுபட்டு வருகிறார்.
ஆனால் ஒவ்வொரு முறையும் ஏதேதோ பலவீனமாக காரணங்களின் பின்னால் ஒளிந்துகொண்டு, நடவடிக்கையிலிருந்தும் அவர் தப்பி விடுகிறார்.
இது தொடரக்கூடாது என வலியுறுத்திய டத்தோ ஸ்ரீ சரவணன், சம்ரி மீது உடனடி சட்ட நடவடிக்கை எடுக்குமாறு உள்துறை அமைச்சை கேட்டுக் கொண்டார்.
அவர் மீது ஏராளமான புகார்கள் செய்யப்பட்டு விட்டன; இந்துக்களை அவர் தொடர்ந்து சீண்டுவதைத் தடுக்க, தீர்க்கமான ஒரு முடிவை அரசாங்கம் எடுத்தே ஆக வேண்டுமென சரவணன் கூறினார்.
பேய் பிடித்தது போலவும் மது போதையில் இருப்பது போலவும், ‘வேல் வேல்’ எனக் கூறிக் கொண்டு ஆடும் போது இந்துக்களுக்கு அது இழிவாகத் தெரியவில்லை என தனது facebook பதிவில் சம்ரி சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டுள்ளார்.
இந்துக்கள் செய்வதைப் பார்த்து தான் மற்றவர்களும் வெறுமனே பின்பற்றுகிறார்கள்; ஆனால் மற்றவர் செய்யும் போது மட்டும் அது அவர்களுக்கு இழிவாகப் படுகிறது; மற்றவர் இழிவுப்படுத்தக் கூடாது என்றால், அவ்வாறு செய்வதை முதலில் நீங்கள் நிறுத்துங்கள்; இல்லையென்றால் ஏளனம் செய்கிறார்களே என கூப்பாடு போடாதீர்கள்” என சம்ரி வெளியிட்டுள்ள பதிவு பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
ஏற்கனவே ஏரா வானொலி விவகாரத்தால் புண்பட்டிருக்கும் இந்துக்களை இது மேலும் மேலும் காயப்படுத்துவதாக, சமூக ஊடகங்களில் மக்கள் கொந்தளிக்கின்றனர்.
2018-ஆம் ஆண்டு சுபாங் ஜெயா, சீஃபீல்ட் ஆலயத்திற்கு வெளியே நிகழ்ந்த கலவரத்தில், தீயணைப்பு வீரர் Muhammad Adib Mohd Kassim உயிரிழந்த சம்பவத்தையும் சா’ம்ரி தொடர்புப்படுத்தி பேசியிருக்கிறார்.
அதாவது அறிவிப்பாளர்கள் ‘வேல் வேல்’ என்று ஆடியதால், Adib-புக்கு நடந்தது போன்று உயிரிழப்பு எதுவும் ஏற்பட்டுவிடவில்லையே என சற்று நக்கலான தோரணையில் சா’ம்ரி பதிவிட்டுள்ளார்.
‘வேல் வேல்’ என உச்சரித்து வீடியோவில் ஆட்டம் போட்ட ஏரா வானொலி அறிவிப்பாளர்கள் மூவர் விசாரணைக்கு ஆளாகியிருப்பது குறித்து கருத்துரைக்கையில் சா’ம்ரி வினோத் அந்த சர்ச்சைக் கருத்தைப் பதிவேற்றியுள்ளார்.