
கங்கார், மார்ச்-8 – பெர்லிஸ், ஆராவில் உள்ள சீர்திருத்த மையத்தில் கழிவறையில் வழுக்கி விழுந்ததாகக் கூறப்பட்ட இளைஞன், துவாங்கு ஃபாவ்சியா மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தான்.
லங்காவியைச் சேர்ந்த 23 வயது அவ்விளைஞன் 1952-ஆம் ஆண்டு அபாயகர போதைப்பொருள் சட்டத்தின் கீழ் அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்தான்.
லங்காவி மேஜிஸ்திரேட் நீதிமன்றம் தண்டனையை அறிவிக்கும் வரை, டிசம்பர் 17 முதல் அவன் அம்மையத்தில் தடுத்து வைக்கப்பட்டான்.
இந்நிலையில் நேற்று முன்தினம் கழிவறையில் விழுந்து பாதி சுயநினைவற்ற நிலையில் அவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.
கல்லீரல் மற்றும் குடலில் ஏற்பட்ட உட்காயங்களால் அவ்விளைஞன் மரணமுற்றது தொடக்கக் கட்ட மருத்துவ பரிசோதனையில் கண்டறியப்பட்டது.
எனினும் குற்ற அம்சங்கள் இருப்பதற்கான அறிகுறியாக உடலில் வெளிக்காயங்கள் எதுவும் இல்லை.
கீழே விழுந்ததால் இடப்பக்க நெற்றியில் 3 சென்டி மீட்டர் ஆழத்துக்கு ஏற்பட்ட காயம் மட்டுமே இருந்ததாக, ஆராவ் போலீஸ் தலைவர் சூப்ரிடென்டண்ட் Ahmad Mohsin Md Rodi தெரிவித்தார்.
இதையடுத்து திடீர் மரணமாக அச்சம்பவம் வகைப்படுத்தப்பட்டுள்ளது.