
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் தொழிலதிபர்களுக்கான புதிய பல்நுழைவு பயண அனுமதி அட்டையின் வாயிலாக, அவர்கள் இங்கு 6 மாத காலத்திற்கு தங்க முடியும்.
அவர்களின் தேவையைப் பொறுத்து மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பற்கும் வாய்ப்பு இருப்பதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நாசூத்தியோன் இஸ்மாயில் கூறினார்.
வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் மலேசியாவுக்குள் நுழையும் முதலீட்டாளர்கள் மற்றும் தொழிலதிபர்களுக்கு அவ்வட்டை வழங்கப்படும்.
முதலீட்டாளர் அட்டைத் திட்டம் என்றும் அழைக்கப்படும் அப்புதியத் திட்டமானது, மலேசியாவில் முதலீடு செய்ய ஒப்புக் கொண்ட வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்நாட்டுக்குள் நுழைவதை எளிதாக்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நடப்பில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கென சிறப்புப் பயண அட்டை எதுவும் இல்லை; மாறாக, அவர்களின் சொந்த நாடுகளைப் பொறுத்து 14 முதல் 90 நாட்களுக்கு பயன்படுத்தக் கூடிய சமூகப் பயண அட்டையே வழங்கப்படுகிறது.
உள்துறை அமைச்சின் Xpats Gateway இணைய அகப்பக்கம் வாயிலாக இத்திட்டம் அமுல்படுத்தப்படும்.
இது குறித்த மேல் விவரங்களும் அப்பக்கத்தில் இடம் பெற்றிருப்பதாக சைஃபுடின் சொன்னார்.