
கோலாலம்பூர், மார்ச் 12 – மலேசியகினி நிருபர் பி.நந்தா குமார், பாகிஸ்தான் முகவரிடமிருந்து 20,000 ரிங்கிட் லஞ்சம் பெற்றதாக எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஷா ஆலம் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்படவுள்ளது.
இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள நந்தா, இன்று பிற்பகல் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC, அவருக்கு இது குறித்து தகவல் அளித்ததாக தெரிவித்தார்.
நான் குற்றமற்றவன் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. இது என்னை மௌனமாக்கும் முயற்சி என்பதோடு ஊழலை வெளிச்சத்துக்கு கொண்டு வருவதிலிருந்து தடுக்க நினைக்கும் திட்டம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதனிடையே, மலேசியகினியின் நிர்வாகம் நந்தாவிற்கு ஆதரவாக இருப்பதாக ஆசிரியர் ஆர்.கே.ஆனந்த் கூறியுள்ளதோடு நீதிமன்றத்தில் குற்றம் நிருபனமாகும் வரை நந்தா நிரபராதி என வலியுறுத்தினார்.
மூத்த நிருபரான நந்தா, ஒரு பாகிஸ்தானிய வெளிநாட்டுத் தொழிலாளர் தருவிப்பு முகவரிடமிருந்து 100,000 ரிங்கிட் லஞ்சம் கோரியதாகவும், பின்னர் அதனை 20,000 ரிங்கிட்டாக குறைத்து லஞ்சம் பெற்றதாகவும் கூறப்பட்டு கைதானார்.