
தாப்பா, ஏப்ரல்-11, கருத்து சுதந்திரம் மற்றும் பேச்சுரிமை என்ற போர்வையில் எல்லைமீற வேண்டாமென, பொது மக்கள் குறிப்பாக சமூக ஊடக பிரபலங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மற்றவர்களை இழிவுப்படுத்துதல், எல்லைமீறும் விமர்சனங்கள், அவதூறுகளைப் போன்றவற்றை அவர்கள் தவிர்க்க வேண்டுமென, தொடர்புத் துறை அமைச்சர் டத்தோ ஃபாஹ்மி ஃபாட்சில் நினைவுறுத்தினார்.
பேராக், ஆயர் கூனிங் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நாளை சனிக்கிழமை நடைபெறவிருக்கும் நிலையில், அவர் இவ்வெச்சரிக்கையை விடுத்துள்ளார்.
குறிப்பாக தேர்தல் காலங்களில் இதுபோன்ற விதிமீறல்கள் அதிகரித்து விடுகின்றன.
அண்மையில், பேராக்கில் உள்ள சீனப் பள்ளியொன்றில் நாட்டின் தேசிய கீதம் சீன மொழியில் பாடப்பட்டதாக, உண்மைக்குப் புறம்பான ஒரு தகவலை டிக் டோக் பிரபலம் வைரலாக்கி, பின்னர் மன்னிப்புப் கேட்ட சம்பவத்தை ஃபாஹ்மி உதாரணமாகக் காட்டினார்.
ஓர் அரசியல் கட்சியின் ஆதரவாளரான அப்பெண், போலீஸ் விசாரணைக்காக கைதுச் செய்யப்பட்டும் உள்ளார்.
வாட்சப்பில் வருவதையெல்லாம் வைரலாக வேண்டும் என்பதற்காக, உறுதிப்படுத்தப்படாத தகவல்களை பரப்பினால் இது தான் நடக்கும்.
எனவே, தேவையில்லாமல் வம்பை விலைக்கு வாங்க வேண்டாமென, ஃபாஹ்மி கேட்டுக் கொண்டார்.
திருத்தப்பட்ட தொடர்பு-பல்லூடகச் சட்டத்தின் கீழ், அத்தகையக் குற்றங்களுக்கு 500,000 ரிங்கிட் வரையில் அபராதம் விதிக்கப்படலாம் என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.