
டெங்கில், ஏப்ரல்-12- சிலாங்கூர், டெங்கிலில் மசூதிக் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட நிலத்தில் குடும்பக் கோயிலை அமைத்துள்ளவர்கள், ஒரு மாதத்தில் அந்நிலத்தை காலி செய்ய வேண்டும்.
சிலாங்கூர் இஸ்லாமிய சமயத் துறையான (Jais) அக்காலக்கெடுவை விதித்துள்ளது.
சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு செப்பாங் மாவட்ட மற்றும் நில அலுவலத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதால், அக்குடும்பத்தின் அத்துமீறல் குறித்து தாங்கள் போலீஸில் புகார் செய்யவில்லை என, Jais இயக்குநர் Mohd Shahzihan Ahmad கூறினார்.
இந்த 1 மாதத்தில் அந்நிலம் காலி செய்யப்படுவதை உறுதிச் செய்வோம் என்றார் அவர்.
Jais-சின் மேலாண்மையில் உள்ள நிலங்கள் எந்தவோர் அத்துமீறலிலிருந்தும் விடிபட்டிருக்க வேண்டுமென்ற சிலாங்கூர் சுல்தான் ஆணையிட்டுள்ளார்.
எனவே, சம்பந்தப்பட்ட குடும்பத்தின் அத்துமீறலை தமது தரப்புக் கடுமையாகக் கருதுவதாக அவர் சொன்னார்.
முன்னதாக அந்நிலத்திற்கு வருகை மேற்கொண்ட Jais அதிகாரிகள், அது இன்னமும் டெங்கில் புதிய மசூதிக்காக ஒதுக்கப்பட்ட நிலமே என்பதை உறுதிச் செய்தனர்.
எனினும் உள்ளூர் இந்தியச் சமூகத்துடனான அச்சந்திப்பு சுமூகமாக நடைபெற்று, கூட்டு முடிவுக்கு வித்திட்டது.
புதிய மசூதியின் கட்டுமானம் அடுத்தாண்டு தொடங்குமென எதிர்பார்க்கப்படுவதாக Mohd Shahzihan சொன்னார்.
இது போன்ற சம்பவங்களை அடையாளம் காண இந்த 1 மாதக் காலக் கட்டத்தில் தனக்குச் சொந்தமான அனைத்து நிலங்களிலும் Jais சோதனை நடத்துமென்றும் அவர் கூறினார்.
சர்ச்சையாகியுள்ள அந்நிலத்தில் அனுமதியில்லாமல் ஓர் இந்து கோயிலும், ஒரு சீன வழிபாட்டு மேடையும் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது