
புத்ராஜெயா, ஏப்ரல்-18, சிலாங்கூர், கிள்ளானில் உள்ள தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் ஏற்பட்ட நெரிசலுக்கு, கடந்த இரண்டு மூன்று நாட்களாக நோயாளிகளின் வருகை அதிகரித்ததே காரணமாகும்.
சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ Dr சுல்கிஃப்ளி அஹ்மாட் தனது X தளத்தில் அதனை உறுதிப்படுத்தினார்.
எல்லா சாத்தியங்களையும் எதிர்கொள்ள மருத்துவமனை நிர்வாகம் முழு தயார் நிலையில் தான் இருந்தது; ஹரி ராயா முடிந்த 2 வாரங்கள் வரையில் கூட அப்படியொன்றும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து விடவில்லை.
ஆனால், கடந்த சில தினங்களாகத் தான், வழக்கத்திற்கு மாறாக கூட்டம் கூடியதாக அவர் சொன்னார்.
தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் நெரிசல் ஏற்பட்டு, வார்ட்டில் அனுமதிக்கப்பட நோயாளிகள் வரிசைப் பிடித்து காத்திருப்பதைக் காட்டும் புகைப்படங்கள் முன்னதாக X தளத்தில் வைரலாகின.
அது குறித்தே அமைச்சர் கருத்துரைத்தார்.
நெரிசல் பிரச்னையைக் கையாள, மருத்துவமனையின் இயக்குநர் Dr செல்வமலர் செல்வராஜன் மற்றும் சுகாதார அமைச்சர் அலுவலகத்தைச் சேர்ந்த சிறப்பு அதிகாரி தலைமையில் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட ஆனால் குடும்பத்தார் வந்து அழைத்துச் செல்வதற்காகக் காத்திருக்கும் நோயாளிகளை, வார்ட்டிலிருந்து ஓய்வெடுக்கும் பகுதிக்கு மாற்றி கட்டில்களை மிச்சப்படுத்துவது, குறிப்பிட்ட பகுதிகளில் கட்டில்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதும் அவற்றிலடங்கும்.
நோயாளிகளின் அதிகரிப்பைச் சமாளிக்க பணியாளர்களின் எண்ணிக்கையும் உயர்த்தப்படுகிறது.
ஏற்பட்ட அசௌகரியங்களுக்காக நோயாளிகளிடமும் அவர்களின் குடும்பத்தாரிடமும் டத்தோ ஸ்ரீ சுல்கிஃப்ளி வருத்தம் தெரிவித்தார்