
குளுவாங், மே 6 – குளுவாங்கில் இரண்டு மாடி கடை வீட்டில் சிக்கிக் கொண்ட ஆடவர் ஒருவரை தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் காப்பாற்றினர்.
குளுவாங் கம்போங் Paya Shell எண்ணெய் நிலையத்திற்கு அருகே ஜாலான் மெர்சிங்கில் உள்ள இரண்டு மாடி கடை வீடு ஒன்றில் தீவிபத்து ஏற்பட்டதாக இன்று மதியம் மணி 12.24 அளவில ஜோகூர் தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவுக்கு தகவல் கிடைத்தது.
அதனைத் தொடர்ந்து குளுவாங் தீயணைப்பு நிலையத்தை சேர்ந்த மூன்று தீயணைப்பு வண்டிகளைச் சேர்ந்த 11 தீயணைப்பு வீரர்கள் சிப்பாங் ரெங்காம் தீயணைப்பு நிலையத்தின் உதவியோடு சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
தீயணைப்புப் படை வீரர்கள் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு வந்தடைந்தபோது அந்த கடையின் முதல் மாடி 60 விழுக்காடு எரிந்ததை கண்டனர்.
மேலும் அந்த கடைவீட்டின் முதல் மாடியில் வாடகைக்கு இருந்ததாக நம்பப்படும் 58 வயதுடைய ஆடவரை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். அந்த நபர் காயம் எதுவும் இன்றி மீட்கப்பட்டதாக தீயணைப்பு படையின் முதிர்நிலை அதிகாரி முகமட் பவ்சி முகமட் நோர் தெரிவித்தார்.