
சிங்கப்பூர், ஜூலை 1 – அண்மைய காலமாக வங்கி மோசடி வழக்குகளை கையாள்வதற்கும், அது தொடர்பான மேல்கட்ட விசாரணைகளுக்கு உதவுவதற்கும், காவல்துறையினர் சம்பந்தப்பட்ட வங்கி கணக்குகளை முடக்கும் சட்டம் இன்று முதல் அமல்படுத்தப்படுமென்று உள்துறை அமைச்சு (MHA) தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு வழக்கின் உண்மைகள் மற்றும் சூழ்நிலைகளின் மதிப்பீட்டின் அடிப்படையில் காவல்துறை அதிகாரிகள் வங்கி கணக்குகள் முடக்க முடிவுகளை எடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட தனிநபர் அல்லது அவரது குடும்ப உறுப்பினர்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் காவல்துறையினர் அக்கணக்குகளை முடக்கும் முடிவுகளை எடுக்கலாமென்று MHA அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், வங்கி கணக்கு முடக்கத்தின் கால வரைவு 30 நாட்கள் வரை நீடிப்பதால், தினசரி செலவுகள் மற்றும் நியாயமான தேவைகளுக்காக, காவல்துறையினரின் அனுமதியுடன் சம்பந்தப்பட்ட நபர்கள் வங்கியிலிருந்து பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.