
பெட்டாலிங் ஜெயா, ஜூலை 2 – போலி வாகன பாதுகாப்பு பட்டைகள் (seat belt) மற்றும் அலாரம் நிறுத்தி (alarm stoppers) போன்றவைகளை இறக்குமதி செய்வதை டிசம்பர் 31 ஆம் தேதி முதல் தடை செய்ய வேண்டுமென்று அரசாங்கம் முடிவெடுத்துள்ளது.
பாதுகாப்பு பட்டைகளின் நினைவூட்டலை முடக்க பயன்படும் சாதனங்களை மலேசியாவில் இறக்குமதி செய்வதைத் தடை செய்வதற்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக வாகன ஓட்டுனர்கள் பாதுகாப்பு பட்டைகளை அணியாதபோது ஒலிக்கும் அலாரச் சத்தத்தை அமைதிப்படுத்த பயன்படும் போலி உபகரணங்கள் மீதான தடையை அறிமுகப்படுத்த உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவீன அமைச்சு பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
நெகிரி செம்பிலானில் சீனப் புத்தாண்டு போக்குவரத்து நடவடிக்கையின் போது, பாதுகாப்பு பட்டை அணியாததற்காக பிடிபட்ட 195 குற்றவாளிகளில் கிட்டத்தட்ட 30 விழுக்காட்டினர் அலார சத்தத்தை நிறுத்துவதற்காக போலி கொக்கிகளைப் பயன்படுத்தியதைச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.