
டாக்கா – ஜூலை-3 -நாடு கடந்து வாழ்ந்து வரும் வங்காளதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினாவுக்கு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஹசினா நாடு திரும்பிய பிறகோ அல்லது நீதிமன்றத்திடம் சரணடைந்த பிறகோ அத்தண்டனை அமுலுக்கு வரும்.
பிரதமர் பதவியிலிருந்து ‘விரட்டியடிக்கப்பட்ட’ பிறகு, வன்முறை தொடர்பில் அவர் மீது தொடரப்பட்ட பல வழக்குகள் குறித்து ஹசினா பேட்டிகள் கொடுத்து வந்தார்.
அதில், சாட்சிகளை மிரட்டும் வகையில் பேசியதாகக் கூறி, 77 வயது ஹசினா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
அவரின் பேச்சு புகார்தாரர்கள் மற்றும் சாட்சிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியதாக அரசு தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்த நிலையில், அவருக்கு இந்த 6-மாத சிறை தண்டனை கிடைத்துள்ளது.
ஹசினாவுக்கு எதிராக கடந்தாண்டு ஜூலையில் பெரும் மாணவர் போராட்டம் வெடித்து, அது பெரும் வன்முறையாக மாறியதில், வேறு வழியின்றி ஆகஸ்ட்டில் பதவி விலகி விட்டு, நாட்டை விட்டே தப்பியோடினார்.
இந்தியாவில் இரகசிய இடத்தில் தஞ்சமடைந்திருப்பதாகக் கூறப்படும் அவர், நாடு திரும்பி வழக்குகளை எதிர்கொள்ளுமாறு பல முறை உத்தரவிடப்பட்டும் டாக்கா செல்ல மறுத்து வருகிறார்.