
ஜோகூர் பாரு, ஜூலை-3 – இஸ்கண்டார் மலேசியாவில் 64 கார் கழுவும் மையங்களில் ஜோகூர் போலீஸ் நடத்திய அதிரடிச் சோதனைகளில், மொத்தமாக 150 பேர் கைதாகியுள்ளனர்.
அவர்களில் 147 பேர் உள்ளூர் ஆடவர்கள், மூவர் வெளிநாட்டவர் என, மாநில போலீஸ் தலைவர் டத்தோ எம். குமார் தெரிவித்தார்.
முறையான பயணப் பத்திரமில்லாது, போதைப்பொருள் உபயோகம் மற்றும் விநியோகம், இணைய சூதாட்டம் உள்ளிட்ட குற்றங்களைக் குறி வைத்து, நேற்று முந்தினம் அந்த ஒருங்கிணைந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் கைதானவர்களில் பலருக்கு பெர்மிட் இல்லை, பலர் அனுமதிக்கப்பட்ட காலத்திற்கும் மேல் இந்நாட்டில் தங்கியுள்ளனர்.
அவர்களை வேலைக்கு வைத்த கார் கழுவும் மையங்களில் உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம் என டத்தோ குமார் எச்சரித்தார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், 100,000 ரிங்கிட் வரையில், அபராதம், 2 முதல் 5 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை, மற்றும் சில சந்தர்ப்பங்களில் பிரம்படியும் விதிக்கப்படலாம்.
இவ்வேளையில் சட்டவிரோத தண்ணீர் குழாய் இணைப்பு, வணிக பெர்மிட் விதிமீறல், விலைப்பட்டியலை காட்சிக்கு வைக்கத் தவறியது உள்ளிட்ட குற்றங்களும் அடையாளம் காணப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டது.