
கோலாலாம்பூர், ஜூலை-3 – பரபரப்பு இல்லாமல் அமைதியாக இருப்பதால், மலேசிய இந்தியச் சமூகத்தைப் பாதிக்கும் பிரச்சினைகளைத் தாம் தீவிரமாகக் கையாளவில்லை என அர்த்தமில்லை என்று, பி.கே.ஆர் கட்சியின் துணைத் தலைவர் நூருல் இஸ்ஸா அன்வார் கூறியுள்ளார்.
பொது மக்களின் கவனத்தைப் பெறுவதை விட, அர்த்தமுள்ள முடிவுகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதற்காகவே, வேண்டுமென்றே தாம் திரைக்குப் பின்னால் பணியாற்றத் தேர்ந்தெடுத்ததாக, பெர்மாத்தாங் பாவ் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் சொன்னார்.
“நாம் எவ்வளவு சத்தமாகப் பேசுகிறோம் என்பது முக்கியமல்ல, மாறாக நமது பணி மிகவும் தேவைப்படுபவர்களுக்கு மாற்றத்தைக் கொண்டுவருகிறதா என்பதே முக்கியம்” என்றார் அவர்.
13-ஆவது மலேசியத் திட்டத்தில் இந்தியச் சமூகத்தை மேம்படுத்துவது குறித்த இன்றைய செய்தியாளர் கூட்டத்தில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சாந்தியாகோ வாசித்த உரையில் நூருல் இசா அவ்வாறு கூறினார்.
பாதியிலேயே பள்ளியிலிருந்து நிற்கும் விகிதங்கள், வறுமை, நாடற்ற தன்மை மற்றும் வேலையின்மை உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வுகளை உருவாக்குவதற்காக, பொருளாதார வல்லுநர்கள், அரசு ஊழியர்கள், அரசு சாரா அமைப்புகள் மற்றும் சமூகத் தலைவர்களை ஒன்றிணைத்து 13வது மலேசிய திட்டத்தில் இடம்பெற வேண்டிய பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன.
இவ்வேளையில், இந்தியச் சமூகம், குறிப்பாக B40 குழுவில் உள்ளவர்கள் எதிர்கொள்ளும் நீண்டகால சவால்களை மையமாகக் கொண்டு, நிபுணர்களை உள்ளடக்கிய இந்த கலந்துரையாடல்களில் கடந்த ஓராண்டாகவே இணைந்து பணியாற்றி வருவதாக நூருல் இசா கூறினார்.
4 வயது முதல் 6 வயது வரையிலான எல்லா குழந்தைகளுக்கும் 13வது மலேசியத் திட்டத்தில் 2027க்குள் பாலர்பள்ளி வகுப்புகள் கட்டாயமாக்கப்படும் என நூருல் இசா கூறினார்.
இதில் தாய்மொழி பள்ளிகளும் அடங்கும் என்றார் அவர்.
மேலும் people first community lab எனும் திட்டத்தின் வழி இந்திய இளையோர் மற்றும் பெண்களுக்கு தொழில்திறன் மற்றும் தொழில் முனைவோர் பயிற்சிகள் நாடளாவிய நிலையில் வழங்கப்படும் எனவும் கூறிய நூருல் இசா, elevate her and rebel builders திட்டத்தின் மூலம், வழிக்காட்டுதல், வணிகத்துக்கான தொடக்க முதலீடு, தலைமைத்துவ திறன் பயிற்சிகளும் வழங்கபடும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அடுத்ததாக, இந்தியர்களுக்கான மேம்பாட்டு நடவடிக்கைகள், மறுசீரமைக்கப்பட்டு வெளிப்படையான அனைவரையும் உள்ளடக்கிய அரசாங்கத்தின் ஒரு அமைப்பாக உருவாக்கப்படும் என உறுதியளித்தார்.